Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கடுக்கா: விமர்சனம்

தனது அம்மாவின் உழைப்பில் சொகுசாக வாழும் விஜய் கவுரிஷ், எதிர்வீட்டில் குடியேறும் ஸ்மேஹாவுக்கு காதல் தொல்லை கொடுக்கிறார். அவரது நண்பர் ஆதர்ஷ் மதிகாந்தும் ஸ்மேஹாவை திருமணம் செய்ய விரும்புவதாக சொல்கிறார். விஜய் கவுரிஷின் காதலை ஏற்கும் ஸ்மேஹா, அவருக்கு தெரியாமல் ஆதர்ஷ் மதிகாந்தையும் காதலிக்கிறார். அதற்கு என்ன காரணம்? நிஜத்தில் அவர் யாரை காதலிக்கிறார் என்பது எதிர்பாராத கிளைமாக்ஸ். இளம் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் காதல் பிரச்னையை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும்படி சொல்லி, தனி முத்திரை பதித்துள்ளார் இயக்குனர் எஸ்.எஸ்.முருகராசு. ஹீரோ விஜய் கவுரிஷ், அவரது நண்பர் ஆதர்ஷ் மதிகாந்த், ஹீரோயின் ஸ்மேஹா ஆகியோர் போட்டி போட்டு இயல்பாகவும், சிறப்பாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஹீரோயின் தந்தை மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா ஆகியோரும் யதார்த்தமாக நடித்து கவனத்தை ஈர்த்துள்ளனர்.

அந்த கிராமத்துக்கே சென்று வந்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது, சதீஷ்குமார் துரைக்கண்ணுவின் சிறப்பான ஒளிப்பதிவு. கெவின் டி.கோஸ்டா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளன. எடிட்டர் எம்.ஜான்சன் நோயல் பணி பாராட்டுக்குரியது. சிறுபட்ஜெட்டில் தரமான படம். பார்த்துவிட்டு ரசிக்கலாம், சிரிக்கலாம், சிந்திக்கலாம்.