Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கேரளாவில் ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்: மலையாள நடிகர்கள் சிக்குகின்றனர்

திருவனந்தபுரம், ஏப்.4: கேரள மாநிலம் ஆலப்புழாவில் ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பிரபல மலையாள நடிகர்களிடம் விசாரணை நடத்த கலால் துறையினர் தீர்மானித்துள்ளனர். கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் கஞ்சாவுடன் கும்பல் தங்கி இருப்பதாக ஆலப்புழா மாவட்ட கலால்துறை போதைப்பொருள் தடுப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கலால்துறையினர் லாட்ஜில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதில் ஒரு அறையில் நடத்திய சோதனையில் தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தப்பட்ட ரூ. 3 கோடி மதிப்புள்ள உயர் ரக கலப்பின கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த தஸ்லிமா சுல்தானா (46), அவரது உதவியாளர் ஆலப்புழாவைச் சேர்ந்த பிரோஸ் (26) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்தன. தஸ்லிமா சுல்தானா பெங்களூரு, சென்னையில் இருந்து கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை கடத்தி கேரளாவில் விற்பனை செய்து வந்துள்ளார். அவருக்கு சென்னை, பெங்களூருவில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. கடந்த பல வருடங்களாக சென்னையில் தான் தங்கியுள்ளார்.

பிரபல மலையாள நடிகர்களான ஷைன் டோம் சாக்கோ, நாத் பாசி ஆகியோருக்கு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதை கலால்துறையினரிடம் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நடிகர்கள் 2 பேரிடமும் அடிக்கடி செல்போனில் பேசிய விவரங்களும் கலால் துறையினருக்கு கிடைத்துள்ளன. இதைத் தொடர்ந்து நடிகர்கள் ஷைன் டோம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாசியிடம் விரைவில் விசாரணை நடத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஷைன் டோம் சாக்கோ தமிழில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திலும், தெலுங்கிலும் நடித்துள்ளார். நாத் பாசி சமீபத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர்கள் தவிர மலையாள சினிமாவில் மேலும் பல நடிகர்களுக்கு தஸ்லிமா சுல்தானா கஞ்சா விற்பனை செய்துள்ளாரா? என்பது குறித்தும் கலால் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.