ஆத்யக் புரடக்சன்ஸ் தயாரிப்பில் , தமிழ் தயாளன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதவன் ,ஷீலா ராஜ்குமார், ஜாக்குலின், பானு, உட்பட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘‘கெவி‘‘. மலையடிவாரம், பள்ளத்தாக்கு என்பதே ’‘ கெவி‘‘. கோடைக்கானல் அடிவாரத்தில் வெள்ளக் கெவி எனும் கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை, போராட்டம், வாழ்வாதாரத்துக்கான கோரிக்கைகளும், அவமானங்களும் தான்...
ஆத்யக் புரடக்சன்ஸ் தயாரிப்பில் , தமிழ் தயாளன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதவன் ,ஷீலா ராஜ்குமார், ஜாக்குலின், பானு, உட்பட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘‘கெவி‘‘. மலையடிவாரம், பள்ளத்தாக்கு என்பதே ’‘ கெவி‘‘. கோடைக்கானல் அடிவாரத்தில் வெள்ளக் கெவி எனும் கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை, போராட்டம், வாழ்வாதாரத்துக்கான கோரிக்கைகளும், அவமானங்களும் தான் இந்தக் கதையின் மையம்.
இயக்குநர் தமிழ் தயாளன், தன் முதல் படத்திலேயே நாமெல்லாம் தென்றலாக நினைத்து சுற்றுலாவாகக் கடக்கும் மலைகளை கரடுமுரடாகக் கடக்கும் கிராம மக்களின் உண்மை நிலையை காட்ட முயன்றுள்ளார். தேர்தல் வந்தால் மட்டும் கிராமத்துக்கு ஏறும் எம்.எல்.ஏ-வையும், அவரை எதிர்த்துப் போராடும் “மலையன்” ஆதவனையும், அவன் எதிர்கொள்ளும் காவல் துறை தொல்லைகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறார். இடையில் பிரசவ வலியில் போராடும் மந்தாரையின் நிலை, எப்படியாவதுக் காப்பாற்றத் துடிக்கும் அப்பாவி ஊர் மக்கள். முடிவு என்ன என்பது மீதிக் கதை.
ஷீலா ராஜ்குமார் உட்பட பலரும் மிக இயற்கையாக நடித்துள்ளனர். குறிப்பாக புதுமுக நடிகர் ஆதவன், தன் மொத்த உடல்மொழியால் மலையனாகவே சென்று நிற்கிறார். படம் முழுக்க மலைவாழ் மக்களின் உணர்வுகளை தூலிக்கட்டிக் கொண்டு ஓடி இன்னும் ஓய்வில்லாமல் கிடப்பதை காட்டுகிறது காட்சிகள்..
ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெய சூரியின் ஒளிப்பதிவு, இருளிலும் ஜொலிக்கிறது. லாந்தர், டார்ச் ஆகியவற்றால் மட்டுமே ஒளி பெறும் காட்சிகள் தனித்து நிற்கின்றன. பின்னணி பால சுப்ரமணியனின் இசை, ஒலிக்கலவை ஆகியவை கதைக்கேற்ப அமைந்திருக்கின்றன. ஆனால் திரைக்கதையில் சில பளீச் இல்லாத இடங்கள், முக்கியமாக அவசர உதவிக்காக வரும் குழுவின் பங்களிப்பு குறைவாக உள்ளது.
மீண்டும் மீண்டுமான காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் எடிட்டர் ஹரி குமார். மொத்தத்தில், "கெவி" திரைப்படம் இன்னமும் ஓயாத கால்களில் தூலிக் கட்டிக்கொண்டு ஓடும் மலைக்கிராமங்களின் ஓலக் குரலகாக ஒலிக்கிறது. காட்சிகளின் வீரியத்தைக் கூட்டியிருந்தால் அந்த ஒலி பேரொலியாக கேட்டிருக்கும்.