Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

குமாரசம்பவம் விமர்சனம்...

சமூக பிரச்னைகளுக்காக போராடும் இளங்கோ குமரவேலுக்கு ஜி.எம்.குமார் தனது வீட்டை வாடகைக்கு விடுகிறார். ஜி.எம்.குமாரின் பேரன் குமரன் தங்கராஜனுக்கும், இளங்கோ குமரவேலுக்கும் கருத்து வேறுபாடு தொடர்கிறது. திரைப்பட இயக்குனராக விரும்பும் குமரன் தங்கராஜனுக்காக வீட்டை விற்று பணம் கொடுக்க முடிவு செய்யும் ஜி.எம்.குமார், அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை இளங்கோ குமரவேலுக்கு கொடுக்க வேண்டும் என்று உயில் எழுதி வைக்கிறார்.

இதனால் குமரன் தங்கராஜன் ஆவேசம் அடைகிறார். இந்நிலையில், திடீரென்று இளங்கோ குமரவேல் மரணம் அடைகிறார். அவரது இறப்புக்கு குமரன் தங்கராஜன்தான் காரணம் என்று போலீசார் விசாரிக்கின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. டி.வியில் இருந்து சினிமாவுக்கு வந்துள்ள குமரன் தங்கராஜனுக்கு லவ், ஆக்‌ஷன், காமெடி, ஆக்டிங் இயல்பாக வருகிறது. அறிமுக படத்திலேயே பாஸ் மாஸ்க் வாங்குகிறார். பாயல் ராதாகிருஷ்ணா அழகாக இருக்கிறார், அளவாக நடித்துள்ளார். ஜி.எம்.குமார், இளங்கோ குமரவேல் ஆகியோர் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர்.

பாலசரவணன் காமெடி நன்கு கைகொடுத்துள்ளது. மற்றவர்களின் நடிப்பும் தேவையான அளவுக்கு இருக்கிறது. ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவும், அச்சு ராஜாமணியின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன. காமெடி காட்சிகளும், வசனங்களும் ரசிக்க வைக்கின்றன. திரைக்கதையில் இயக்குனர் பாலாஜி வேணுகோபால் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இளங்கோ குமரவேலின் மரணத்துக்கான காரணம் கவனிக்க வைக்கிறது.