Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

லடாக் மழை வெள்ளத்தில் சிக்கிய மாதவன்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்பட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள 534 சாலைகள் மூடப்பட்டுள்ளன, மேலும் 1,184 மின் விநியோக மின்மாற்றிகள் செயலிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் மாநிலம் முழுவதும் பலி எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

மழை வெள்ளம் காரணமாக லே மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேச பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்புக்காக லே நகருக்கு சென்றுள்ள நடிகர் மாதவன் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். இந்த தகவலை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள மாதவன், ‘‘17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் லேயில் கனமழையில் சிக்கிக் கொண்டேன், விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வெளியேற வழியில்லை. இயற்கையின் முன் நாம் சிறியவர்கள்’’ என்றார். முன்னதாக இந்தியில் ஆமிர்கானுடன் சேர்ந்து அவர் நடித்த ‘3 இடியட்ஸ்’ படப்பிடிப்பின்போது இதேபோல் லடாக் மழை வெள்ளத்தில் மாதவன் சிக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.