Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

குட்டி தளபதியும் கிடையாது திடீர் தளபதியும் கிடையாது: சிவகார்த்திகேயன் ஓப்பன் டாக்

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், விக்ராந்த், பிஜூ மேனன் நடித்துள்ள ‘மதராஸி’ படம், வரும் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசை அமைத்துள்ளார். சென்னையில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘7ஆம் அறிவு’ படத்தின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க என்னை அழைத்தனர். பிறகு ஒரு ஹீரோவை முடிவு செய்து, ஜெய்யை வைத்து விழாவை நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால், முருகதாஸ் முன்னால் ஏதாவது சாகசங்கள் செய்து, சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி விடலாம் என்று நினைத்தேன். பிறகு அவரது தயாரிப்பில் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்தேன். இப்போது அவரது இயக்கத்தில் நடித்துள்ளேன்.

நிறையபேர் என்னை குட்டி தளபதி, திடீர் தளபதி என்று சொல்கின்றனர். அப்படி எதுவும் கிடையாது. அண்ணன் அண்ணன்தான், தம்பி தம்பிதான். நான் அவரது (விஜய்) ரசிகர்களை பிடிக்க பார்க்கிறேன் என்று சொல்கின்றனர். ரசிகர்களை அப்படி எல்லாம் பிடிக்க முடியாது. அஜித் சார் மன்றத்தை கலைத்துவிட்டாலும், அவர் பின்னால் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுபோல் ரஜினி சார், சிம்பு சார், தனுஷ் சார் என்று அனைவருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ரசிகர்களை சாம்பாதிக்க வேண்டும். நான் இப்போதுதான் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளேன். விமர்சனம் எல்லோருக்கும் வரும். விமர்சனம் சொன்னால் எடுத்துக் கொள்ளுங்கள். சோஷியல் மீடியாவில் ஆயிரம் சொல்வார்கள். நானும், அனிருத் சாரும் 8 படங்களில் பணியாற்றியுள்ளோம். அவர் எனக்கு ஒரு நண்பருக்கும் மேலானவர். அவர் ஜாலியாக பணியாற்றுவதால் ஹிட் பாடல்களை கொடுக்க முடிகிறது.