Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

லோகா சாப்டர் 1: சந்திரா: விமர்சனம்

பெங்களூருவில் ஒரே வீட்டில் தனது நண்பர்களுடன் நஸ்லென் கே.கபூர் தங்கியிருக்கிறார். காதல் தோல்வியில் இருந்து மீண்டு வரும் அவரது எதிர்வீட்டில் சந்திரா (கல்யாணி பிரியதர்ஷன்) குடியேறுகிறார். அவரை நஸ்லென் பின்தொடரும் வேளையில், சில அமானுஷ்ய விஷயங்கள் இருப்பதை அறிந்து அதிர்கிறார். இந்நிலையில் சந்திராவுக்கு போலீசார் மூலம் பேராபத்து ஏற்படுகிறது. அவரது தலைமை சக்தி, அங்கிருந்து உடனே செல்லும்படி உத்தரவிடுகிறது. சந்திரா யார்? அவரைச் சுற்றியிருக்கும் அமானுஷ்யங்கள் என்ன என்பது மீதி கதை.

சூப்பர் பவர் சந்திராவாகவும், நீலியாகவும் மாறுபட்ட இரு கெட்டப்புகளில் கல்யாணி பிரியதர்ஷன் அசத்தி இருக்கிறார். பறந்து, பறந்து தாக்கும் ஆக்‌ஷன் காட்சிகளில், சூப்பர் ஹீரோக்களுக்கே சவால் விடுகிறார். சாந்தமான காட்சிகளிலும் ஸ்கோர் செய்து, முழு படத்தையும் தோளில் சுமந்துள்ளார். நஸ்லென் கே.கபூருக்கு சந்திரா மீது ஏற்படும் காதலும், பிறகு அவரது சக்தியை அறிந்தவுடன் ஏற்படும் காமெடி கலந்த பயமும் சுவாரஸ்யமாக இருக்கிறது. கெட்ட போலீசாக, டெரர் வில்லனாக டான்ஸ் மாஸ்டர் சாண்டி கலக்கியுள்ளார். அருண் குரியன், சந்து சலீம் குமார் உள்பட பலரது கேரக்டர்கள் கவனத்தை ஈர்க்கின்றன. டொவினோ தாமஸின் மேஜிக் அனைவரையும் கவரும்.

சூப்பர் (ஹீரோ) வுமன் படத்துக்கான ஒளிப்பதிவை தரமாக வழங்கியுள்ளார், நிமிஷ் ரவி.

எடிட்டர் சாமன் சாக்கோவின் பணி பாராட்டுக்குரியது. பின்னணி இசையில் ஜேக்ஸ் பிஜாய் மிரட்டியுள்ளார். யானிக் பென்னின் அதிரடி சண்டைக் காட்சிகள் ரசிகர்களுக்கு பெருந்தீனியாக அமைந்துள்ளது. மலையாளத்தின் முதல் சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் என்பதால், கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் திறம்பட கையாளப்பட்டுள்ளது. சந்திராவின் பிளாஷ்பேக் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சாந்தி பாலசந்திரனின் திரைக்கதை அருமை. இயக்குனர் டொமினிக் அருண் விறுவிறுப்பாக படமாக்கியுள்ளார். வழக்கமான ஃபேண்டஸி படங்களின் காட்சிகளே இதிலும் இடம்பெறுவது சிறிது ஏமாற்றமாக இருந்தாலும், சூப்பர் வுமன் ஹீரோவுக்கு தியேட்டரில் ஆதரவு பெருகும்.