Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

எம். ஆர் . ராதா குறித்து நாம் பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்

தந்தை பெரியாரின் கொள்கைகளில் தீவிர நம்பிக்கை கொண்டவர், நடிகவேள் எம்.ஆர்.ராதா. அதனால்தானோ என்னவோ, தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதியே அவர் இவ்வுலகை விட்டு மறைந்தார் போலும். 1954 அக்டோபர் 25ம் தேதி கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் திரைக்கு வந்து வெற்றிபெற்ற படம், ‘ரத்தக்கண்ணீர்’. இப்படத்துக்கு திருவாரூர் கே.தங்கராசு எழுதிய சாட்டையடி வசனங்கள், அன்று மட்டுமல்ல, இன்று மட்டுமல்ல, இனி வரும் காலத்துக்குப் பொருந்தும் விதமாக இருப்பதே இதன் தனிச்சிறப்பு. இதில் எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்கு நிகர் அவர் மட்டுமே. ஆனால், இப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றும் கூட அவருக்கு தமிழில் புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதாவது, மறைமுக சதி காரணமாக அவரை யாரும் படத்தில் ஒப்பந்தம் செய்யவில்ைலயாம். இப்படியே மூன்று வருடங்கள் ஓடியது. உடனே அவருக்கு நெருக்கமான சிலர், ‘எதற்கும் நீங்கள் கோயிலுக்குச் சென்று, கடவுளை பயபக்தியுடன் கும்பிட்டால், புதுப்பட வாய்ப்புகள் குவியும்’ என்று அறிவுரை சொல்லியிருக்கின்றனர். பகுத்தறிவுக் கொள்கைகளில் ஆழமாக ஊறிய எம்.ஆர்.ராதா, தனது நண்பர்கள் சொன்னதைச் செய்ய மறுத்துவிட்டார். இப்படியே அமைதியாக நாட்களைக் கடத்தி வந்த அவர், தனது மேடை நாடகங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி, மக்களை வசியம் செய்து வந்தார்.

இந்நிலையில், இயக்குனர் ஏ.பி.நாகராஜன், நடிகர் வி.கே.ராமசாமி இணைந்து லட்சுமி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த ‘நல்ல இடத்து சம்மந்தம்’ என்ற படத்தில், திடீரென்று எம்.ஆர்.ராதாவை ஹீரோவாக்கினர். சவுகார் ஜானகி ஹீரோயினாக நடிக்க, மலையாளத்தின் முன்னணி நடிகர் பிரேம் நசீர் முக்கிய வேடத்தில் நடித்தார். கே.சோமு இயக்கினார். 1958 பிப்ரவரி 16ம் தேதி வெளியான இப்படம் வெற்றி பெற்றது. பன்முகத்திறமை வாய்ந்த நடிகர் என்று எம்.ஆர்.ராதாவை மக்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பாராட்டி கொண்டாடினர். இதன் விளைவாக எம்.ஆர்.ராதாவுக்கு பல புதிய படங்கள் ஒப்பந்தமானது.

அதில் ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1959 அக்டோபர் 31ம் தேதி திரைக்கு வந்த ‘பாகப்பிரிவினை’ படம், அவரை உச்சத்துக்கு அழைத்துச் சென்றது. சிவாஜி கணேசனுடன் அவர் போட்டி போட்டு நடித்தார். பிறகு எம்.ஜி.ஆர் படங்களில் நடிக்க ஆரம்பித்த எம்.ஆர்.ராதா, தமிழிலுள்ள அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன், கதையின் நாயகன் உள்பட எம்.ஆர்.ராதா ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம்.