ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த 98வது படம் " மாரீசன்" . சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு மற்றும் பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உடன் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திருடன் தயா...
ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த 98வது படம் " மாரீசன்" . சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு மற்றும் பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உடன் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திருடன் தயா (பஹத் பாசில்), ஒரு வீட்டுக்குள் திருட வருகிறான். அங்கே வேலாயுதம் (வடிவேலு) சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கிறார். அம்னீசியா காரணமாக எல்லாவற்றையும் மறந்து போன வேலாயுதம், தயாவை தன் மகன் என நினைத்து, தன்னை அவிழ்த்து விடும்படி சொல்கிறார். ஆனால் தயா அவரை விடுவிக்க ரூ.25,000 கேட்கிறான். பணம் இல்லாத வேலாயுதம் ஏ.டி.எம்-க்கு செல்லத் தயார் என்கிறார். அங்கே தான் தயா, வேலாயுதத்தின் கணக்கில் ரூ.25 லட்சம் இருப்பதைப் பார்த்துவிடுகிறான். அதனை எப்படியாவது அடிக்க வேண்டும் என தீர்மானித்து, வேலாயுதத்துடன் பயணம் தொடர்கிறான்.
படத்தின் பெரும் வலு, வடிவேலு மற்றும் பஹத் பாசிலின் நடிப்பே. இருவரும் படத்தின் பெரும்பகுதியை தங்கள் திறமையால் தூக்கி நிறுத்துகிறார்கள். வடிவேலுவின் முகபாவனை, உடை அலங்காரம், மறதி நிலையிலுள்ள பேச்சு அனைத்தும் மனதில் நிற்கும். பஹத் பாசில் தனது சுறுசுறுப்பான நடிப்பில் பார்வையாளர்களை ஈர்க்கிறார்.
விவேக் பிரசன்னா, சித்தாரா, ரேணுகா, கோவை சரளா உள்ளிட்டோர் கதை முன்னேறும் விதத்தில் உதவியுள்ளனர். சித்தாராவின் சில காட்சிகள் கண்கலங்க வைக்கும். ஒருசில இடங்களில் வடிவேலுவின் நடிப்பு பார்வையாளரை நெகிழ வைக்கும். ஆனால் அவர் இன்னும் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிப்பதே ரசிகர்களின் ஆசை.
கோவை சரளா காவலதிகாரி வேடத்தில் மிகையாக நடித்துள்ளார். ஆங்கிலம் பேசும் காட்சிகள் செயற்கை. அவர்களது பழைய ஹிட் காம்போவை பயன்படுத்தியிருக்கலாம் .
கதையின் முதல் பாதி சுவாரஸ்யமாக தொடங்கினாலும், இடையில் சில இடங்களில் கதையின் ஓட்டம் மந்தமாகிறது. திரைக்கதை செம்மையாகக் கட்டமைக்கப்படவில்லை. சில திருப்பங்கள் எதிர்பார்க்கப்படாதவையாக இல்லாமல், நமக்குத் தெரிந்த திருப்பமாகவே இருக்கிறது.
யுவன் சங்கர் ராஜாவின் இசை பலம். "ஃபாஃபா..." , "மாரீசா..." பாடல்கள் ஓகே ரகம்.
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவில் திருவண்ணாமலை, நாகர்கோவில், கோவை போன்ற இடங்கள் அழகாக படம்பிடிக்கப் பட்டுள்ளன. ஶ்ரீஜித் சாரங் எடிட்டிங் இரண்டாம் பாதியில் வேகமாக செல்லும். அந்த வேகம் முன்பே கொடுத்திருக்கலாம். திரைக்கதையை திட்டமிட்டு கட்டமைத்திருக்க முடியாமல் போனது ஒரு குறையாக உள்ளது. ஆனால் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு இந்தப்படம் ஒரு ஆறுதல்.
மொத்தத்தில், பயணம் இன்னும் வேகமாக சென்று இருந்தால் சொல்லப்பட்ட கருத்தும் திருப்பமும் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். எனினும் தேவையான சமூகப் படமாக மாறி இருக்கிறது " மாரீசன்" திரைப்படம்.