Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மதராஸி வி ம ர் ச ன ம்

தமிழகம் முழுவதும் துப்பாக்கிகளை விநியோகம் செய்ய, 6 கன்டெய்னர் லாரிகள் சென்னைக்கு வருகிறது. அவற்றை காஸ் தொழிற்சாலையில் மறைத்து வைத்திருப்பதை அறிந்த என்ஐஏ என்கிற தேசிய புலனாய்வு முகமை அதிகாரி பிஜூ மேனன் தலைமையிலான குழு, காஸ் தொழிற்சாலைக்குள் சென்று அவற்றை அழிக்க முடிவு ெசய்கிறது. உள்ளே சென்று அவற்றை வெடிக்க, சூசைட் ஆபரேஷனுக்கு தகுந்த நபரை பிஜூ மேனன் தேடுகிறார். தனது காதலி ருக்மணி வசந்த் வெறுத்ததால் அடிக்கடி தற்கொலை முயற்சியில் ஈடுபடும் ஒரு சாதாரண, ஆனால், விசித்திர சக்தி கொண்ட சிவகார்த்திகேயனை இந்த ஆபரேஷனுக்கு பயன்படுத்த பிஜூ மேனன் முடிவு செய்கிறார்.

சந்தோஷமாக சாக தயாராக இருக்கும் சிவகார்த்திகேயன், கடத்தல் தாதாக்கள் வித்யூத் ஜம்வால், ஷபீர் கல்லரக்கல் கோஷ்டியுடன் மோத காஸ் தொழிற்சாலைக்கு செல்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. விசித்திர மனநிலை கொண்ட கேரக்டரில் அதகளம் செய்திருக்கும் சிவகார்த்திகேயன், ஆக்‌ஷன் காட்சிகளில் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். முழு படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கிறார். அவருக்கும், ருக்மணி வசந்துக்குமான காதல் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கிறது. அழகாக வந்து, அளவாக நடித்துவிட்டு செல்கிறார் ருக்மணி வசந்த். அதிகார தோரணையை இயல்பாக வெளிப்படுத்தி, மகன் விக்ராந்தின் முடிவில் கலங்கி, அனுபவ நடிப்பை வழங்கி இருக்கிறார் பிஜூ மேனன். பலம் வாய்ந்த வில்லன்களாக வித்யூத் ஜம்வால், ஷபீர் கல்லரக்கல் அசத்தியுள்ளனர். விக்ராந்த், ‘ஆடுகளம்’ நரேன், லிவிங்ஸ்டன் ஆகியோரும் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

முழுநீள ஆக்‌ஷன் படத்துக்கான ஒளிப்பதிவை சிறப்பாக செய்துள்ளார், சுதீப் எலமன். ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் தெறிக்கிறது. ஸ்டண்ட் இயக்குனர்கள் கெவின் குமார், திலீப் சுப்பராயன் மற்றும் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் பணி பாராட்டுக்குரியது. அனிருத் இசையில் ‘சலம்பல’, ‘தங்கப்பூவே’ ஆகிய பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் விறுவிறுப்பை அதிகரித்துள்ளார். லாஜிக் மீறல்கள் இருந்தாலும், ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு ஃபுல்மீல்ஸ் கொடுத்து எழுதி இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.