ஐதராபாத்: தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு ஐதராபாத்தில், கச்சிபவுலி என்ற இடத்தில் ‘ஏஎம்பி சினிமாஸ்’ என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரை சில வருடங்களுக்கு முன்பு திறந்தார். பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த தியேட்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அடுத்ததாக ஐதராபாத் நகரில் ஆர்டிசி எக்ஸ் ரோடில் எஎம்பி கிளாசிக் என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரைத் திறக்க உள்ளார். மொத்தம் 7 ஸ்கிரீன்கள் அடங்கிய இந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர் அடுத்த ஆண்டு சங்ராந்திக்கு திறக்கப்படும் எனத் தெரிகிறது.
ரசிகர்களிடம் உள்ள சினிமா மோகம் என்றுமே குறைந்ததில்லை. அவர்கள் தியேட்டர்களில் வந்து படம் பார்ப்பதை ஒரு கொண்டாட்டமாகக் வைத்துள்ளனர். எனவே தியேட்டர்கள் திறப்பதில் முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். கமல்ஹாசனை போல், சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிலே செலவழிக்கும் நடிகர்களில் மகேஷ்பாபுவும் முக்கியமானவர். அதே சமயம், அவர் ஆண்டுதோறும் 30 கோடி ரூபாய்க்கு தொண்டு உதவிகளும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.