உடல்நிலை தேறியுள்ள மம்மூட்டி, தற்போது படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்கிறார். அவரது நிஜப்பெயர், முகமது குட்டி இஸ்மாயில். தனக்கு மம்மூட்டி என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறித்து அவர் கூறுகையில், ‘மம்மூட்டி என்ற பெயரை நான் தேர்வு செய்யவில்லை. கல்லூரி நாட்களில் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் இப்பெயர் எனக்கு கிடைத்தது.
ஒருநாள் எனது நண்பர்களுடன் நடந்து சென்றபோது, எனது பாக்கெட்டில் இருந்த பர்ஸ் தவறி கீழே விழுந்தது. அதை எடுத்துக் கொடுத்த ஒரு நண்பர், என் அடையாள அட்டையை பார்த்து, முகமது குட்டி என்ற பெயரை சுருக்கி, ‘உங்கள் பெயர் மம்மூட்டியா?’ என்று கேட்டார். அன்று முதல் நண்பர்கள் என்னை ‘மம்மூட்டி’ என்று அழைத்தனர். அப்போது எனக்கு பெயர் சூட்டியவரின் பெயர், சசிதரன்.
ஆனால், எனக்கு பெயர் சூட்டிய கிரெடிட்டை வேறு சிலர் எடுத்துக்கொண்டனர். அதுபற்றி கட்டுரைகள் எழுதி செய்தித்தாள்களில் வெளியிட்டனர். உண்மையில் எனக்கு மம்மூட்டி என்று பெயர் சூட்டியவர், சசிதரன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். இதுநாள் வரை அவரை ரகசியமாக பாதுகாத்து வந்தேன். அதாவது, அவரை நான் மறைத்து வைத்திருந்தேன்’ என்றார்.
