Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மணிரத்னத்தை மடக்கிய நாகார்ஜூனா

1961ல் அக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்திரி நடித்த தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நாகார்ஜூனா, 1986ல் தெலுங்கில் ரிலீசான ‘விக்ரம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இது 1983ல் இந்தியில் ரிலீசான ‘ஹீரோ’ என்ற படத்தின் ரீமேக். 1989ல் மணிரத்னம் இயக்கத்தில் நாகார்ஜூனா நடித்த படம், ‘கீதாஞ்சலி’. இளையராஜா இசை அமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்தார். ஹீரோயினாக கிரிஜா நடித்தார். தெலுங்கில் வெற்றிபெற்ற `கீதாஞ்சலி’ படம் தேசிய விருது மற்றும் மாநில விருதுகளை வென்றது.

‘கீதாஞ்சலி’ படத்தை இயக்க மணிரத்னத்தை சம்மதிக்க வைத்த சம்பவத்தை நாகார்ஜூனா பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‘எனது தந்தை நாகேஸ்வர ராவ் மீதுள்ள அன்பின் காரணமாகவே நான் நடித்த படங்களை மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். அதை மாற்ற முடிவு செய்த நான் ‘ஆகாரி போராட்டம்’, ‘மஜ்னு’ போன்ற படங்களில் நடித்தேன். இதில் ‘மஜ்னு’ படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. தினமும் காலை 6 மணிக்கு மணிரத்னம் ஆபீசுக்கு வெளியே நிற்பேன். அப்போது அவர் வாக்கிங் செல்வார். இறுதியில் அவரை ‘கீதாஞ்சலி’ படத்தை இயக்குவதற்கு சம்மதிக்க வைத்தேன். இதை தமிழில் இயக்க விரும்பினார். தெலுங்கில் அவருக்கு மார்க்கெட்டை உருவாக்க நினைத்து, இதை தெலுங்கில் இயக்க பரிந்துரைத்தேன். 1989ல் வெளியான ‘கீதாஞ்சலி’, தமிழில் ‘இதயத்தை திருடாதே’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றிபெற்றது’ என்றார்.