Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரயில் முன் பாய்ந்த மஞ்சு வாரியர் காப்பாற்றிய மனோஜ் கே.ஜெயன்: பகீர் சம்பவம்

சென்னை: சுந்தர் தாஸ் இயக்கத்தில் 1996ல் வெளிவந்த சல்லாபம் என்கிற திரைப்படத்தின் மூலம்தான் மஞ்சு வாரியர் அறிமுகமானார். தனது முதல் படம் என்கிற எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் மிகவும் யதார்த்தமாக நடித்திருந்தார். இந்த நிலையில், அப்படத்தில் மஞ்சு வாரியருடன் இணைந்து நடித்த நடிகர் மனோஜ் கே. ஜெயன், அப்படத்தில் நடந்த ஷாக்கிங் சம்பவம் குறித்து இப்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.

‘‘சல்லாபம் படம் துவங்கி கிட்டத்தட்ட 24 நாட்கள் ஆன நிலையில், அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஒரு ரயில்வே ட்ராக்கில் படப்பிடிப்பு நடந்தது. தன் காதல் கை கூடாத நிலையில், ஓடும் ரயிலில் விழுந்து தன் உயிரை மஞ்சு வாரியர் கதாபாத்திரம் மாய்த்து கொள்வதாக காட்சி இருந்தது. அந்த காட்சியில் நானும் இடம் பெற்று இருந்தேன். ஆனால், மஞ்சு வாரியர் வசனம் பேசியபடி தன்னை மறந்து அந்த கதாபாத்திரமாகவே மாறி ரயில் தண்டவாளத்தை நெருங்கி விட்டார்.

ரயில் கிட்டத்தட்ட அருகில் நெருங்கி விட்டது. அந்த நேரத்தில் உடனடியாக நான் அவரது கைகளை வலுவாக பிடித்து, மேலும் போகவிடாமல் தடுத்து நிறுத்தினேன். சரியாக அந்த நேரத்தில் ரயிலும் எங்களை மிக அருகில் ஒட்டியபடி சென்றது. ரயில் சென்றதும் பின்னால் இருந்து இயக்குநர் கட் சொன்ன பிறகுதான், அவரை என் பிடியில் இருந்து விடுவித்தேன்.

அந்த காட்சி வீணாகிவிட்டது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், படக்குழுவினர் காட்சி மிகவும் தத்ரூபமாக இருந்தது என பாராட்டினார்கள். அன்று மட்டும் அவரை நான் இழுத்து பிடிக்காமல் இருந்திருந்தால், அவர் ரயில் சக்கரங்களில் விழுந்து இருப்பார். ஒரு நல்ல நடிகையை இந்த திரையுலகம் இழந்திருக்கும்” என அவர் கூறியுள்ளார்.