Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பல உயிர்களை காக்கும் திட்டம்: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை பாராட்டிய சமீரா ரெட்டி

மும்பை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை பாராட்டி நடிகை சமீரா ரெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழில் வாரணம் ஆயிரம், அசல், வெடி உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி. அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், ‘‘8 -9 வருடங்களுக்கு முன்பு எனக்கு ‘Alopecia Areata’ நோய் பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் எனது உடல்நலம் குறித்து மிகவும் கவலைப்பட ஆரம்பித்தேன். தமிழ்நாட்டில் பெரும்பாலான பெண்கள், பாதிப்புகள் அதிகமான பிறகுதான் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். ஆரம்பகட்டத்திலேயே நோயைக் கண்டறிவது மிக முக்கியமானது.

தமிழ்நாட்டில் முதல் முறையாக, 1256 மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. சனிக்கிழமை தோறும் நடத்தப்படும் இந்த முகாம்களில் மகப்பேறியியல், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல், நரம்பியல் மருத்துவம் என அனைத்து பிரிவுகளிலும் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. தமிழக அரசும், முதல்வர் ஸ்டாலினும் மக்கள் மத்தியில் நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது பற்றி மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இது பல உயிர்களைக் காக்கும்’’ என்று சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.