சென்னை: இசட் பிலிம்ஸ் சார்பில், சி. புதுகை மாரிஸா எழுதி, இயக்கி, தயாரிக்க, பிளாக்பாண்டி, செண்ட் ராயான், வடிவுக்கரசி, ஷகீலா ஆகியோர் நடிப்பில், ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள படம் ‘மாஸ்க்’. 2017ல் பதிவு செய்து தயாரித்த தனது படத்தின் டைட்டிலை தனக்கு தெரிவிக்காமல், தற்போது வெற்றிமாறன் வழங்கும் படத்திற்கு கொடுத்துவிட்டதாக இயக்குநர் மாரிஸா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து இயக்குநர் மாரிஸா கூறியது: 2017 ஆம் ஆண்டு எங்கள் படத்தை துவக்கிய போது, ஜாக்குவார் தங்கம் தலைவராக இருக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மாஸ்க் எனும் டைட்டிலை முறையாக பதிவு செய்தோம். வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் படம் உருவாக்கப்படுவதாக தகவல் வந்த போதே உடனே மீண்டும் முறையிட்டேன்.
ஆனால் அப்போதும் டைட்டில் உங்களுடையது தான் யாருக்கும் NOC தரவில்லை என்று ஜாக்குவார் தங்கம் உறுதி அளித்தார். தற்போது வெளியீட்டுத் தேதி குறிப்பிட்டு போஸ்டர் வந்த பிறகு அவரிடம் முறையிட்ட போது, எந்த பதிலும் இல்லை. அவரை நேரில் சந்தித்து கேட்ட போது, நான் மாஸ்க் குழுவினரிடம் பேசி உனக்கு இழப்பீடு வாங்கி தருகிறேன் என்றார். பின் நான்கு நாட்கள் அலைய விட்ட பிறகு, மீண்டும் அவரிடம் கேட்ட போது, இப்ப யார் வேண்டுமானாலும், எந்த டைட்டில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம், அதை ஒன்றும் செய்ய முடியாது என்று பதிலளித்தார். இந்த விவகாரத்தில் எனக்கு நியாயம் வேண்டும்.
