Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மாயக்கூத்து: விமர்சனம்

கதைகள் படைப்பதனால் தன்னை கடவுள் போல் நினைக்கும் சுயநலமும், ஆணவமும் கொண்ட எழுத்தாளர் வாசன் (நாகராஜன் கண்ணன்), டெல்லி கணேஷ் எடிட்டராக இருக்கும் பத்திரிகையில் தொடர்கதை எழுதுகிறார். இந்நிலையில், திடீரென்று அவர் படைத்த கதாபாத்திரங்கள் உயிர்பெற்று வந்து, அவரை தொடர்ந்து துன்புறுத்துகின்றன. சமூக மேம்பாட்டுக்காக அவர் பொறுப்புணர்வுடன் படைப்புகளை எழுத வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இறுதியில் என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

வித்தியாசமான கதையை தேர்வு செய்த இயக்குனர் ஏ.ஆர்.ராகவேந்திரா, குறைந்த பட்ஜெட்டில் நேர்த்தியான படத்தை கொடுத்துள்ளார். கற்பனை கதாபாத்திரங்கள் உயிர்பெற்று, தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. எழுத்தாளர் கேரக்டரில் (பார்ப்பதற்கு மினி ஜெயராம் போல் இருக்கும்) நாகராஜன் கண்ணன் இயல்பாக வாழ்ந்திருக்கிறார். அவர், பேராசிரியர் மு.ராமசாமி மூலம் எப்படி தெளிவு பெறுகிறார் என்பதை நேர்த்தியான திரைக்கதை விவரிக்கிறது.

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ரகுபதி, எஸ்.கே.காயத்ரி, சாய் தீனா, கார்த்திக் சீனிவாசன், ரேகா குமணன், தினேஷ் செல்லையா, மிருதுளா, பிரகதீஸ்வரன், டி.ஆண்டனி ஜானகி, முருகன் கோவிந்தசாமி, கே.கோபால் ஆகியோர் கவனத்தை ஈர்க்கின்றனர். அஞ்சனா ராஜகோபாலன் பின்னணி இசை, நிறைவு. சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு, சிறப்பு. நாகூரான் ராமச்சந்திரனின் எடிட்டிங் கச்சிதம். படத்தின் ஒவ்வொரு எபிசோடும் ஒரு அரசியலை மறைமுகமாக பேசுகிறது. அதை ஆணித்தரமாக சொல்ல இயக்குனர் தயங்கி இருக்கிறார். மாற்று சினிமாவை விரும்பும் ரசிகர்களுக்கு பிடிக்கும்.