சென்னை: ஆண்களுக்கும் மாதவிடாய் ஏற்பட வேண்டும் என்ற பேச்சால் ராஷ்மிகாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராஷ்மிகா தனது பேச்சால் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, ‘‘ஆண்களுக்கு மாதவிடாய் வர வேண்டும்’’ என இவர் கூறியதை தொடர்ந்து, நெட்டிசன்கள் இவரை கண்டமேனிக்கு திட்டி தீர்த்து வருகிறார்கள். இதை தொடர்ந்து, தான் சொல்ல வந்த விஷயம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என விளக்கம் கொடுத்துள்ளார் ராஷ்மிகா.
அதாவது, ‘‘ஆண்களுக்கு மாதவிடாய் ஒருமுறையாவது வந்தால், அதனால் ஏற்படும் கஷ்டங்களை அவர்களால் உணர முடியும் என்பதற்காகவே அப்படி சொன்னேன்’’ என ராஷ்மிகா கூறியுள்ளார். ஆனால் நெட்டிசன்களோ, ஆண்கள் குடும்ப பொறுப்பு உள்ளிட்ட பல வலிகளை தாங்கிக்கொண்டு தான் வாழ்கிறோம். பெண்களின் வலியை எங்களாலும் உணர முடியும், என பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் ராஷ்மிகாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். ‘‘பெண்களின் கஷ்ட காலங்களில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது ஆண்கள்தான். அவர்களை இப்படி கேவலப்படுத்தியதற்காக ராஷ்மிகா மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறியுள்ளனர்.
