ஸ்ரீராம் கார்த்திக், ஐடி கம்பெனியில் பணியாற்றுகிறார். திடீரென்று அவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். ஆனால், அவரது பேஸ்புக் மெஸன்ஜரில் ஃபாத்திமா நஹீம் என்ற பெண் ஒரு தகவல் அனுப்பி, அவரது தற்கொலையை தடுக்கிறார். ஒருகட்டத்தில் அவரை தீவிரமாக காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். அப்போது ஸ்ரீராம் கார்த்திக்குடனான காதலை முறித்துக்கொண்டு சென்ற மனிஷா ஜஸ்னானி என்ட்ரியாகி, ‘உன் மனைவியை எனக்கு காட்டு’ என்று வீட்டுக்கு வருகிறார்.
ஆனால், உண்மை தெரிந்ததும் அதிர்ச்சி அடைகிறார். மீதி கதை எதிர்பாராத கிளைமாக்சுடன் முடிகிறது. ஃபேண்டஸி காதல் கதையை புதுமையாக யோசித்த இயக்குனர் ரமேஷ் இலங்காமணி, அதை விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராக கொடுக்க முயற்சித்திருக்கலாம். ஸ்ரீராம் கார்த்திக் இயல்பாக நடித்துள்ளார்.
மெஸன்ஜரில் குறுஞ்செய்தி அனுப்பி அவரை உருகி, உருகி காதலிக்கும் ஃபாத்திமா நஹீம், நவநாகரீக பெண் மனிஷா ஜஸ்னானி, தோழி கேரக்டரில் வரும் வைஷாலி ரவிச்சந்திரன் ஆகியோரின் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. வழக்கமான கேரக்டரில் பிரியதர்ஷினி ராஜ்குமார், ‘ஜீவா’ ரவி, லிவிங்ஸ்டன் நடித்துள்ளனர். ஆர்.பாலகணேசன் ஒளிப்பதிவும், எம்.அபுபக்கர் இசையும் கதையை நகர்த்த உதவியுள்ளன. ரமேஷ் இலங்காமணியின் ‘கண்ணுக்கு தெரியாத பெண்ணின் காதல் கல்யாணம்’ என்ற கான்செஃப்ட் சற்று கவனிக்க வைக்கிறது.
