Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களை உருவாக்கிய தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன் காலமானார்

சென்னை: ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல தயாரிப்பாளருமான ஏவிஎம்.சரவணன் (86), வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னோடிகளின் ஒருவரான தயாரிப்பாளரும், இயக்குனருமான ஏவி.மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ், ஏவிஎம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களை வெற்றிகரமாக நிர்வகித்து வந்த ஏவிஎம்.சரவணன், தமிழில் ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தனது சகோதரர்களுடன் இணைந்து ‘பராசக்தி’, ‘நானும் ஒரு பெண்’, ‘அன்பே வா’, ‘சகலகலா வல்லவன்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘ராஜா சின்ன ரோஜா’, ‘மனிதன்’, ‘எஜமான்’, ‘மின்சார கனவு’, ‘ஜெமினி’, ‘சிவாஜி: தி பாஸ்’, ‘வேட்டைக்காரன்’, ‘அயன்’, ‘திருப்பதி’ உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். அவரது உடல் நேற்று மாலை ஏவிஎம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ஏவிஎம் சரவணன் நேற்று முன்தினம் தனது 86வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு மனைவி, மகன் எம்.எஸ்.குகன், மகள் உஷா இருக்கின்றனர்.

வெள்ளை உடை, நெற்றியில் குங்குமம், கனிவான பேச்சு, தன்னடக்கத்துடன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு இருப்பது ஏவிஎம்.சரவணனின் வழக்கம். தயாரிப்பு நிர்வாகியாக இருந்து, பிறகு தயாரிப்பாளராக மாறிய அவர் பல படங்களை தயாரித்தது மட்டுமின்றி, டி.வி தொடர்களையும் தயாரித்துள்ளார். இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராகவும், அகில உலக திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணை தலைவராகவும், தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டு கழக இயக்குனராகவும் திறம்பட பணியாற்றிய ஏவிஎம்.சரவணன், சென்னை மாநகர ெஷரீப் ஆக 1986ல் பொறுப்பு வகித்துள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் சிகரம் விருது உள்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார்.

கடந்து வந்த பாதை: கடந்த 1939 டிசம்பர் 3ம் தேதி பிறந்த ஏவிஎம் சரவணன், தனது 18வது வயதில் ஏவிஎம் ஸ்டுடியோவில் பணியாற்ற தொடங்கினார். ஏவிஎம் ஸ்டுடியோ நிர்வாகம், படத்தயாரிப்பு, விநியோக உரிமை, திரையரங்குகளில் படங்களை வெளியிடுவது உள்பட பல்வேறு துறைகளில் அவர் திறம்பட பணியாற்றினார். 1958ல் ‘மாமியார் மெச்சிய மருமகள்’ என்ற படத்தின் மூலம் ஆரம்பித்த அவரது திரையுலக பயணம், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்கள் தயாரிப்பது வரை தொடர்ந்தது. குறிப்பாக ‘முரட்டுக்காளை’, ’சகலகலா வல்லவன்’, ‘முந்தானை முடிச்சு’, ’புதுமைப் பெண்’, ’மிஸ்டர் பாரத்’, ’சம்சாரம் அது மின்சாரம்’, ‘மனிதன்’, ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’, ‘மாநகர காவல்’, ‘எஜமான்’, ‘சிவாஜி: தி பாஸ்’ உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை தயாரிக்க அவர் துணை நின்றார். ’முயற்சி திருவினையாக்கும்’, ‘மனதில் நிற்கும் மனிதர்கள்’ (4 பாகங்கள்), ‘ஏவிஎம் 60 சினிமா’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ‘நானும் சினிமாவும்’ என்ற தலைப்பில் தொடர் ஒன்றை எழுதினார். எந்த சூழ்நிலையிலும் பதற்றம் இல்லாமல் செயல்பட்டு வந்த அவர், தீவிர சாய் பாபா பக்தராக இருந்தார்.

* திரையுலகினர் இரங்கல்: ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

ஏவிஎம் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டிருந்த ஏவிஎம்.சரவணனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ‘ஜென்டில்மேன் என்பதற்கு எடுத்துக்காட்டு ஏவிஎம்.சரவணன். எப்போதும் வெள்ளை உடைதான் அணிவார். அதுபோல் அவரது உள்ளமும் வெண்மை. சினிமாவை உயிராக நேசித்தார். 10 நிமிடங்கள் பேசினால் கூட, அதில் 10 முறை ‘அப்புச்சி, அப்புச்சி’ என்று தனது தந்தையை நினைவுபடுத்துவார். என்மீது அதிகமான அன்பு வைத்தவர் மற்றும் எனக்கு துணையாக நின்றவர் அவர்’ என்றார்.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘ஏவிஎம் சரவணனுக்கும், எனக்கும் இருக்கும் உறவு என் அண்ணன் சந்திரஹாசன், சாருஹாசன் மற்றும் எனக்கு இருக்கும் உறவு போன்றது. ஏவிஎம் என்ற பெரிய தோப்பில் நடப்பட்ட ஒரு சிறிய செடி நான். இன்று வளர்ந்து வந்திருக்கிறேன். பேர் சொல்லும் பிள்ளையாக சரவணன் இருந்திருக்கிறார். என் ஆசையெல்லாம், இந்த தோப்பின் மூன்றாவது தலைமுறையினர் என்னை போன்ற பல செடிகளை நட்டு, இந்த பெரும் பள்ளியின் பெயர் நிலைத்திருக்க செய்ய வேண்டும். அவருக்கு நன்றி சொல்லும் ஒரே வழி, அவர் கண்ட பாதையில் வீறுநடை போட்டு நடப்பதுதான்’ என்று பேசியிருக்கிறார்.

நடிகர் சிவகுமார் பேசுகையில், ‘கடந்த 73 வருடங்களில் ஏவிஎம் நிறுவனம் 175 படங்கள் தயாரித்துள்ளது. எனது சொந்த பெயர் பழனிசாமி. இந்த பெயரை சிவகுமார் என்று மாற்றி வைத்தவர், ஏவிஎம்.சரவணன். அவரது நினைவாகத்தான் சூர்யாவுக்கு சரவணன் என்று பெயர் சூட்டினேன். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும்’ என்று இரங்கல் தெரிவித்தார். ஏவிஎம்.சரவணனின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நேற்று மாலை 3.30 மணியளவில், ஏவிஎம் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. அப்போது குடும்பத்தினர் மற்றும் சிவகுமார், எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் இருந்தனர்.