Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மிடில் கிளாஸ் விமர்சனம்...

நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த முனீஷ்காந்த், விஜயலட்சுமி தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். கிராமத்தில் நிலம் வாங்கி வீடு கட்டி சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது முனீஷ்காந்தின் கனவு. நகரிலேயே சொகுசாக வாழ வேண்டும் என்பது விஜயலட்சுமியின் எண்ணம். வசதியில்லாத அவர்கள் அடிக்கடி மோதுகிறார்கள். இந்நிலையில், முனீஷ்காந்தின் தந்தை வேல.ராமமூர்த்தி எப்போதோ இலவசமாக கொடுத்த கடையின் முதலாளி ராம் லால் சேட், நன்றிக்கடனாக ஒரு கோடி ரூபாய்க்கான செக்கை முனீஷ்காந்திடம் கொடுக்கிறார்.

அதை தொலைத்துவிட்டு அல்லல்படும் முனீஷ்காந்த் என்ன ஆகிறார்? யூடியூப்பில் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைக்கும் விஜயலட்சுமி, கணவனை என்ன செய்தார் என்பது மீதி கதை. கதையின் நாயகன் என்றாலும் காமெடி செய்து, ஓரிரு காட்சியில் குணச்சித்திர நடிப்பால் கண்கலங்க வைக்கும் முனீஷ்காந்த், ஒரு கோடி ரூபாய்க்கு அதிபதியாகும் கனவில் குதிப்பது சுவாரஸ்யம். அவருக்கு நேரெதிர் குணம் கொண்ட மனைவியாக வரும் விஜயலட்சுமிக்கு சிறந்த நடிகைக்கான விருது நிச்சயம்.

மற்றும் ராதாரவி, காளி வெங்கட், வேல.ராமமூர்த்தி, குரேஷி, கோடாங்கி, மாளவிகா அவினாஷ் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். சுதர்சன் ஒளிப்பதிவு ஏஒன். பிரணவ் முனிராஜ் பின்னணி இசை, பிரமாத ரகம். நடுத்தரக் குடும்பத்திலுள்ள தம்பதியின் மனநிலையை யதார்த்தமாக சொல்லி கவனத்தை ஈர்த்துள்ள இயக்குனர் கிஷோர் எம்.ராமலிங்கம், பணம் மட்டுமே பிரதானம் கிடையாது என்று பாடம் நடத்தியிருக்கிறார். திடீரென்று ஒரு கோடி ரூபாய் செக் தருவது நம்பும்படி இல்லை.