Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மார்கன் விமர்சனம்...

சென்னையில் அழகான பெண் களின் உடலில் ஊசியின் மூலம் ரசாயனத்தைச் செலுத்தி, அவர்களை கருப்பாக மாற வைத்து படுகொலை செய்யும் சைக்கோ கொலையாளியின் கொடூர செயல், போலீசாருக்கு பெரிய சவாலாக இருக்கிறது. கொலையாளியை கண்டுபிடிக்க மும்பையில் இருந்து சென்னைக்கு வரும் உயர் போலீஸ் அதிகாரி விஜய் ஆண்டனி, நீச்சல் வீரர் அஜய் திஷானின் நடவடிக்கை களை பார்த்து சந்தேகப்பட்டு, அவரை விசாரணை வளையத்தில் கொண்டு வருகிறார்.

ஒருகட்டத்தில் அவர் கொலையாளி இல்லை என்பது தெரிகிறது. ஆனால், அவரிடம் மறைந்திருக்கும் அபார ஞாபக சக்தியின் மூலம் சைக்கோ கொலையாளியை விஜய் ஆண்டனி நெருங்குகிறார். அப்போது ஏற்படுகின்ற அதிரடி திருப்பங்கள் என்ன என்பது மீதி கதை. தீவிர விசாரணையின் போது விஜய் ஆண்டனி அளவாக பேசி, இயல்பாக நடித்து அசத்தியுள்ளார். அவருக்கு இணையான ககன மார்கன் என்ற கேரக்டரில், தேர்ச்சியான நடிப்பை அஜய் திஷான் வெளிப்படுத்தி இருக்கிறார்.

சமுத்திரக்கனி, ராமச்சந்திரன், தீப்ஷிகா, கான்ஸ்டபிள் மகாநதி சங்கர், போலீஸ் அதிகாரி பிரிகிடா சாகா, அஜய் திஷானின் தங்கை அர்ச்சனா, சவாலான வேடத்தில் சேஷ்விதா ராஜு ஆகியோர், அவரவருக்கு கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளனர்.  அறிவியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட துப்பறியும் கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவை எஸ்.யுவா சிறப்பாக வழங்கியுள்ளார்.

விஜய் ஆண்டனியின் பின்னணி இசை படத்துக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் எடிட்டிங் செய்து எழுதி இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். விறுவிறுப்பான காட்சிகளுடன் திரைக்கதையை நகர்த்திச் சென்றுள்ள அவர், அபார ஞாபக சக்தி தொடர்பான காட்சிகளில் இன்னும் நம்பகத்தன்மையை அதிகரித்து இருக்கலாம்.