Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மாரீசன்: விமர்சனம்

பஹத் பாசில், சின்னச்சின்ன திருட்டுகள் செய்து, அப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார். ஒரு வீட்டில் திருடச்சென்ற இடத்தில், ஞாபக மறதியால் அவதிப்படும் வயதான நபர் வடிவேலுவை சந்தித்து, பிறகு பைக்கில் அவருடன் திருவண்ணாமலை பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. வடிவேலு யார்? அவருக்கும், பஹத் பாசிலுக்கும் என்ன தொடர்பு? அவ்வப்போது கொலைகள் நடப்பது ஏன் என்பது அதிர வைக்கும் கிளைமாக்ஸ்.

கதையின் நாயகர்களாக வடிவேலுவும், பஹத் பாசிலும் நேர்த்தியாக நடித்து, கேரக்டருக்கு வலு சேர்த்துள்ளனர். அவர்களின் பாடிலாங்குவேஜ், டயலாக் டெலிவரி, யதார்த்த நடிப்பு, காமெடி போன்றவை ஹீரோயின் இல்லாத, டூயட் இல்லாத குறைகளை போக்கிவிடுகிறது. ஞாபக மறதி வடிவேலு, நல்லவன் போன்ற கெட்டவன் பஹத் பாசில் ஆகியோருக்கு இது முக்கியமான படம். கோவை சரளா, பி.எல்.தேனப்பன், வடிவேலு மனைவி சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேணுகா, லிவிங்ஸ்டன், ‘ஃபைவ் ஸ்டார்’ கிருஷ்ணா, ஹரிதா முத்தரசன் ஆகியோர் மிகையில்லாமல் நடித்து, படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லருக்கு ஏற்ற பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா சிறப்பாக வழங்கியுள்ளார். இளையராஜாவின் ‘நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம்’ என்ற பாடல், இசைப்பிரியர்களுக்கு போனஸ். இன்னொரு ஹீரோ என்று, ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜியை சொல்லலாம். நேர்க்கோட்டில் காட்சிகளை பயணிக்க வைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி கிரியேட்டிவ் இயக்குனராக பணியாற்றிய வி.கிருஷ்ணமூர்த்தி,

எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் ஆகியோரின் பணி பாராட்டுக்குரியது. மாற்றி யோசித்திருக்கும் இயக்குனர் சுதீஷ் சங்கர், முக்கியமான ஒரு சமூக பிரச்னையை லாஜிக் பார்க்காமல் அணுகியுள்ளார். முற்பகுதியில் கத்தரியை வைத்திருந்தால், படம் ஜெட் வேகத்தில் பறந்திருக்கும்.