இந்தியா முழுவதும் முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து ஏற்கனவே ஹிட்டான பல படங்களை, தற்போதைய புதிய தொழில்நுட்பத்தில் புதுப்பித்து மறுவெளியீடு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நாகார்ஜூனா நடிப்பில் கடந்த 36 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘சிவா’ என்ற படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு, வரும் நவம்பர் 14ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. சர்ச்சைக்குரிய இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நாகார்ஜூனா நடித்த முதல் படமான இது அவருக்கும், நாகார்ஜூனாவுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில், இப்படம் மறுவெளியீடு செய்யப்படுவதை அறிந்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து அல்லு அர்ஜூன் தனது மகிழ்ச்சியை ஒரு வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ‘தெலுங்கு படவுலகின் ஐகானிக் படங்களில் ‘சிவா’ படமும் ஒன்று. இது இந்திய திரையுலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படத்துக்கு பிறகுதான் இந்திய மற்றும் தெலுங்கு படவுலகின் பாணி முற்றிலும் மாறியது எனலாம். தெலுங்கு படவுலகிற்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ராம் கோபால் வர்மாவின் பார்வையும், நாகார்ஜுனாவின் அட்டகாசமான நடிப்பும் ‘சிவா’ படத்தை இன்றுவரை ரசிகர்களிடம் எவர்கிரீன் கிளாசிக் படமாக நேசிக்க வைத்திருக்கின்றன. இதன் ரீ-ரிலீஸ் தினத்தில் படத்தை பார்க்க வரும் ரசிகர்கள், தியேட்டர்களில் படத்தை கொண்டாட, இரண்டு லாரிகள் முழுவதும் காகிதங்களை அள்ளிக்கொண்டு வாருங்கள்’ என்று பேசியுள்ளார். கடந்த 1989 அக்டோபர் 5ம் தேதி திரைக்கு வந்த ‘சிவா’ படத்தில் நாகார்ஜூனா, அமலா நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.
