Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தேசிய விருதுக்கு காத்திருக்கும் மம்தா

கடந்த 2005 நவம்பர் 11ம் தேதி மலையாளத்தில் வெளியான ‘மயூகம்’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான மம்தா மோகன்தாஸ், தமிழில் விஷாலுடன் ‘சிவப்பதிகாரம்’, மாதவனுடன் ‘குரு என் ஆளு’, அருண் விஜய்யுடன் ‘தடையறத் தாக்க’, ஆர்யாவுடன் ‘எனிமி’, விஜய் சேதுபதியுடன் ‘மகாராஜா’ உள்பட சில படங்களில் நடித்தார். தற்போது அருள்நிதி நடிக்கும் ‘மை டியர் சிஸ்டர்’ என்ற படத்தில் நடிக்கிறார். ‘என்னங்க சார் உங்க சட்டம்’ பிரபு ஜெயராம் எழுதி இயக்கியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இதில் நடித்தது குறித்து மம்தா மோகன்தாஸ் கூறுகையில், ‘இந்த படத்தில் அருள்நிதிக்கு அக்காவாக நடித்துள்ளேன். அசாத்தியமான ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை சொல்லும் கதையில், டக்கர் வண்டி டிரைவராக நடித்துள்ளேன். உடல் முழுக்க இரண்டு மணி நேரம் டல் கலர் மேக்கப் போட்டுக்கொண்டு நடித்தேன். திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. குறிப்பாக, நெல்லை தமிழ் என்னை பெரிதும் கவர்ந்தது. அவர்கள் பேசும் வட்டாரமொழி மிகவும் பிடித்து விட்டது.

அதனால்தான் அந்த அக்கா கதாபாத்திரத்தில் என்னால் ரசித்து நடிக்க முடிந்தது. தமிழில் எனக்கென்று ஒரு இடத்தை ரசிகர்கள் கொடுத்துள்ளனர். அதை காப்பாற்ற தொடர்ந்து போராடுவேன். எத்தனை மொழிகளில் நடித்தாலும், தமிழில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். கடந்த 20 வருடங்களாக நடித்து வரும் எனக்கு தமிழ் ரசிகர்கள் கொடுக்கும் அன்பையும், ஆதரவையும் மறக்க முடியாது. பல்வேறு மொழிப் படங்களில் பாடியுள்ள நான், சிறந்த நடிப்புக்காக தேசிய விருது வாங்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்’ என்றார்.