மும்பை: ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆனது. அப்படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் 2017-ம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்டது. அப்படமும் பாக்ஸ் ஆபிஸில் 1500 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனைகள் படைத்தது. பாகுபலி திரைப்படம் ரிலீஸ் ஆகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக அப்படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். அதுவும் சாதாரணமாக அல்ல, அதிலும் ஒரு புதுமையை நிகழ்த்தி இருக்கிறார்கள். இரண்டு பாகங்களையும் ராஜமெளலியின் மேற்பார்வையில், ரீ-எடிட் செய்து, அதை ஒரே படமாக இணைத்து, ‘பாகுபலி - தி எபிக்’ என்கிற பெயரில் ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். 3 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும் இப்படம் அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் நாசர் போன்ற மாபெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள இந்தப் படம், தற்போது மீண்டும் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. பாகுபலி தி எபிக் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இந்தியாவில் 12.35 கோடியும், வெளிநாடுகளில் 4 கோடியும் வசூலித்து ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ.16.35 கோடி வசூல் ஈட்டி இருந்தது. இரண்டாம் நாளிலும் வசூல் வேட்டையை தொடர்ந்த இப்படம் உலகளவில் ரூ.13.15 கோடி வாரிசுருட்டி இருக்கிறது. மூன்றாவது நாளில் ரூ.15 கோடியை உலகம் முழுவதும் வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் ரிலீஸ் ஆன மூன்றே நாட்களில் ரூ45 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது பாகுபலி தி எபிக். ரீ-ரிலீஸ் செய்யப்படும் படத்திற்கு இந்த அளவு வசூல் கிடைத்துள்ளது இதுவே முதன்முறை ஆகும். இதே வேகத்தில் சென்றால் ரீ-ரிலீஸில் 100 கோடி வசூலை பாகுபலி தி எபிக் எட்ட வாய்ப்பு உள்ளது.
   