Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை: ராஷ்மிகா உருக்கம்

சென்னை: தனுஷ் நடிப்பில் வரும் 20ம் தேதியன்று திரைக்கு வரும் பான் இந்தியா படம், ‘குபேரா’. தனுஷ் நடித்துள்ள 51வது படமான இதை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தேவி பிரசாத் இசை அமைத்துள்ளார். முக்கிய வேடத்தில் நாகார்ஜூனா நடித்துள்ளார். இப்படத்துக்கான நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் பங்கேற்றிருந்த ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் நடைபெற்ற அகமதாபாத் விமான விபத்து குறித்து உருக்கமாக பேசினார்.

அவர் பேசுகையில், ‘விமான விபத்து செய்தியை பார்த்தவுடன் என் உடல் நடுங்கியது. எதுவும் பேச முடியாத அளவுக்கு அதிர்ச்சி அடைந்துவிட்டேன். அப்போது, இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பது புரிந்தது. நாம் இங்கு வாழ இன்னும் எத்தனை நாட்கள் இருக்கிறது? எதுவரை நம் வாழ்க்கை செல்லும் என்று தெரியவில்லை. எனவே, அதிக கவனமாக இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள், மற்றவர்களிடம் கருணையுடன் இருங்கள்’ என்று சொன்னார். பிறகு அவரிடம், ‘எந்த பிரபலத்திடம் இருந்து, எந்த தகுதியை எடுத்துக்கொள்ள ஆசை?’ என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா, ‘நாகார்ஜூனா வசீகரத்தை எடுத்துக்கொள்வேன். என்ன வேண்டும் என்றாலும் செய்யும் அசாத்திய திறமை படைத்தவர் தனுஷ். அவர் பாடுவார், நடனம் ஆடுவார், இசை அமைப்பார், அனைத்து பணிகளையும் செய்வார். விஜய் தேவரகொண்டாவிடம் இருக்கும் எல்லாமும் எனக்கு வேண்டும். அல்லு அர்ஜூனுடைய ஸ்டைல் வேண்டும்’ என்றார். அவரது பேச்சு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.