Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

"ஓஹோ எந்தன் பேபி" விமர்சனம்...

தனது தந்தை விஜயசாரதியும், தாய் கஸ்தூரியும் எல்லா நேரமும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பதால், அவர்களிடம் இருந்து தப்பிக்க, சினிமாவே சுவாசம் என்று வாழ்கிறார் ருத்ரா. திரைப்பட இயக்குனராக வேண்டும் என்பது அவரது லட்சியம். இதையடுத்து இரண்டு கதைகளை ஹீரோ விஷ்ணு விஷாலிடம் சொல்கிறார். அதை நிராகரிக்கும் விஷ்ணு விஷால், மென்மையான காதல் கதையை எதிர்பார்க்கிறார். உடனே ருத்ரா, தன் நிஜ வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை ஒரு கதையாக சொல்கிறார்.

அது விஷ்ணு விஷாலுக்கு பிடித்ததா? நிஜ வாழ்க்கையில் ருத்ராவுக்கும், அவரது காதலிக்கும் என்ன பிரச்னை? அது தீர்ந்ததா என்பது மீதி கதை. முதல் படத்திலேயே அழுத்தமான கேரக்டரில் அறிமுகமாகியுள்ள ருத்ரா, பாஸ் மார்க் வாங்கியுள்ளார். நிஜத்தில் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் நன்கு கைகொடுத்துள்ளது. அவரது காதலியாக வரும் மிதிலா பால்கர் அட்டகாசமாக நடித்துள்ளார்.

நடிகராகவே தோன்றும் விஷ்ணு விஷால், படத்தின் நகர்வுக்கு உதவியிருக்கிறார். கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, நிவாஷினி, நிர்மல் பிள்ளை, வைபவி ஆகியோரின் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. இயக்குனராக வரும் மிஷ்கின் செய்யும் அலப்பறை சூப்பர். சித்தப்பாவாக வரும் கருணாகரன், ஒன்லைன் காமெடியில் சிரிக்க வைத்துள்ளார். தவிர பாலாஜி சக்திவேல், கீதா கைலாசம், அஞ்சு குரியன் ஆகியோரை வீணடித்துள்ளனர்.

ஹரீஷ் கண்ணனின் ஒளிப்பதிவும், ராஜேஷின் கலை இயக்கமும் மிக நேர்த்தியாக இருக்கின்றன. முதல் பாதியை போல் இரண்டாம் பாதியிலும் எடிட்டர் பிரணவ் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம். ஜென் மார்ட்டின் இசை அமைப்பில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் விறுவிறுப்பாக இருக்கிறது. சினிமாவுக்குள் சினிமா என்ற களத்தில் குதித்த (நடிகர்) கிருஷ்ணகுமார் ராமகுமார், இயக்குனராக வெற்றிபெற்று இருக்கிறார். ஆனால், சினிமாத்தனங்களே இல்லாத படத்தை கொடுக்க, இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். இளம் காதலர்களை படம் கவரும்.