Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: விஜய் தேவரகொண்டா நிதி அகர்வால் உள்பட 29 பேர் மீது வழக்கு; அமலாக்கத்துறை நடவடிக்கை

திருமலை: ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய்தேவரகொண்டா, நடிகை நிதிஅகர்வால் மற்றும் யூடியூபர்கள் உள்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. பொதுமக்களை ஏமாற்றும் வகையில் உழைப்பின்றி எளிமையாக பணம் சம்பாதிக்கவும், சிறிய அளவில் முதலீடு செய்து கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி பல்வேறு வகையில் ஆன்லைனில் சூதாட்டம் நடந்து வருகிறது.

இதற்காக சூதாட்ட செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சூதாட்ட செயலிகளை பிரபல நடிகர்கள், நடிகைகள், யூடியூபர்களை கொண்டு விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த செயலிகளால் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் என பல தரப்பினர் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு பாதிக்கப்படுபவர்களில் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சூதாட்ட செயலிகள் மூலம் விளம்பரம் செய்ததாக மொத்தம் 29 திரைப்பட பிரபலங்கள் மீது ஐதராபாத் மற்றும் சைபராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் அந்த வழக்குப்பதிவின் அடிப்படையில் மேற்கண்ட 29 பேர் மீது அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன்படி நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ், நடிகைகள் மன்ச்சு லட்சுமி, நிதிஅகர்வால், அனன்யாநாகல்லா, ஸ்ரீமுகி மற்றும் நீதுஅகர்வால், விஷ்ணுபிரியா, வர்ஷினி, சிரி ஹனுமந்து மற்றும் வசந்திகிருஷ்ணன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் யூடியூப் பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. விசாரணையின்போது, அதிகாரிகள் அனைவரின் வாக்குமூலங்களையும் பதிவு செய்வார்கள். இதைதொடர்ந்து மேற்கொண்டு கடுமையானநடவடிக்கை இருக்கும் என தெரிகிறது. சூதாட்ட செயலிகள் விளம்பரப்படுத்தியதாக பிரபல நடிகர், நடிகைககள், யூடியூபர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.