சென்னை: லேர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.சாய் தேவானந்த், எஸ்.சாய் வெங்கடேஸ்வரன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘தண்டகாரண்யம்’. அதியன் ஆதிரை எழுதி இயக்கியுள்ளார். தினேஷ், கலையரசன், ஷபீர், பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு நடித்துள்ளனர். வரும் 19ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது தயாரிப்பாளரும், இயக்குனருமான பா.ரஞ்சித் பேசுகையில், ‘‘கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு பணம் சம்பாதிக்கும் நோக்கம் இல்லை. சமூகத்தை சரிப்படுத்தும் முனைப்புடன் வந்துள்ளோம். நான் இயக்குனரானபோது, மூன்று ஆண்டுகள் மட்டுமே திரைத்துறையில் நீடிப்பேன் என்று நினைத்தேன். காரணம், நான் பேசக்கூடிய கருத்துகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தேன்.
எனினும், மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டனர். முன்பெல்லாம் இடதுசாரிகள் அதிகமாக இருப்பார்கள். தற்போது சென்சார் போர்டில் வலதுசாரிகள் அதிகமாக இருக்கிறார்கள்’’ என்றார். இயக்குனர் அதியன் ஆதிரை பேசும்போது, ‘‘முதலில் இயக்குனர் அமீர் நடிக்க இருந்தார். திடீரென்று அவரால் நடிக்க முடியாததால், அந்த கேரக்டரில் தினேஷ் நடித்துள்ளார். ஆதிக்க வர்க்கத்துக்கு எதிராக இப்படம் குரல் எழுப்பும்’’ என்றார்.