Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வாய்ப்பு இல்லாதபோது என்னை பிசியாக்கிய படம் கேப்டன் பிரபாகரன்: ரம்யா கிருஷ்ணன் நெகிழ்ச்சி

சென்னை: தமிழில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 100வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’, கடந்த 1991 ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வந்து வெற்றிபெற்றது. தற்போது 34 வருடங்கள் கழித்து 4கே தரத்தில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு, வரும் 22ம் தேதி படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. ஸ்பேரோ சினிமாஸ் சார்பில் கார்த்திக் வெங்கடேசன் வெளியிடுகிறார். ஆர்.கே.செல்வமணி கூறுகையில், ‘ரம்யா கிருஷ்ணனுக்கு முன்பு சரண்யா நடித்தார்.

மலை கிராமத்து பெண்ணுக்கான உடைகள் அணிவதில் பிரச்னை ஏற்பட்டதால் அவர் விலகி விட்டார். பிறகு ரம்யா கிருஷ்ணன் நடித்தார். ‘ஆட்டமா தேரோட்டமா’ என்ற பாடலை பார்க்கும்போது உற்சாகமாகவும், எனர்ஜியாகவும் இருக்கிறது. அதுதான் இளையராஜாவின் மேஜிக். நான் உதவி இயக்குனராக இருந்தபோது, ரம்யா கிருஷ்ணன் கதாநாயகியாக நடித்தார். முதலில் நான் கிளாப் அடித்ததே ரம்யா கிருஷ்ணன் நடித்த காட்சிக்குத்தான்’ என்றார்.

பிறகு ரம்யா கிருஷ்ணன் கூறும்போது, ‘அப்போது எனக்கு தமிழில் வாய்ப்புகள் வராததால் தெலுங்கில் நடித்தேன். பிறகுதான் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் நடித்தேன். நான் ஆடிய ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல், எவர்கிரீன் பாடலாக மாறியது. இப்படம் எனக்கு கொடுத்த வெற்றி, அடுத்த 10 வருடங்களுக்கு என்னை ரொம்ப பிசியாக்கி விட்டது. அதற்காக விஜயகாந்த் சார், செல்வ மணி ஆகியோ ருக்கு எனது நன்றி’ என்று சொல்லி நெகிழ்ந்தார்.