சென்னை: உலக சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த படம், ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்லெஸ்’ (முகமற்றவரின் முகம்). ட்ரை லைட் கிரியேஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படம், 2024 ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 123-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 2024 ஆண்டிற்கான சிறந்த கிறித்தவ திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, இந்த திரைப்படம் கிறித்தவ துறவியான ராணி மரியாவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படமாகும். இந்தியாவின் மத்திய பிரதேசம் இந்தூரில் மத எல்லைகளை தாண்டி, பெண்கள் வளர்ச்சிக்காக அவர் மேற்கொண்ட தன்னலமற்ற சேவைகளை படம் விளக்குகிறது.
ஆன்மீக உணர்வு, தியாகம், அன்பு, மன்னிப்பு, சமாதானம் மற்றும் ஒருமைப்பாடு போன்ற உயர்ந்த கருத்துகளுடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. 136 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படம் இந்தி, மலையாளம், தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. வின்சி அலாய்சியஸ், சோனாலி மொஹந்தி, ஜீத் மத்தாரு, அஜிஸ் ஜோசப் நடித்துள்ளனர். நவம்பர் 21ம் தேதி முதல் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே கேரளாவில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது.
தயாரிப்பு: சான்றா டிசூசா ராணா. இயக்குனர்: ஷைசன் பி. உசுப். நிர்வாக தயாரிப்பு: ரஞ்சன் ஆபிரகாம். ஒளிப்பதிவு: மகேஷ் ஆனே. இசை: அல்போன்ஸ் ஜோசப். கதை வசனம்: ஜெயபால் ஆனந்தன்.
