கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைந்து தயாரித்துள்ளார். அபின் ஹரிஹரன் இயக்கியுள்ள திரைப்படம் "அதர்ஸ்". ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், R. சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கிறது.
விபத்துக்குள்ளாகும் ஒரு வேன்... அதில் மரணமடைந்த நால்வர் உடன் ஒரு திருடன். விசாரணைக்கு வரும் காவலர் மாதவன் (ஆதித்யா மாதவன்) ஒருபுறம் இந்த விபத்துக்கான உண்மையைத் தேடுகிறார். மறுபுறம், அவரது காதலி டாக்டர் மதுமிதா (கௌரி கிஷன்) செயற்கை கருத்தரிப்பு பிரிவில் நடக்கும் அதிர்ச்சியான மோசடிகளை வெளிச்சமிட முயல்கிறார். இவ்விரண்டு பாதைகளும் ஒரு புள்ளியில் சந்திக்கும் தருணமே படத்தின் திருப்பமும் திகைப்பூட்டும் கிளைமாக்ஸும்.
ஆதித்யா மாதவன் தனது கதாபாத்திரத்தை மிகுந்த செம்மையுடன் வடிவமைத்திருக்கிறார். உறுதியான போலீஸ் தோற்றத்தையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். கௌரி கிஷன், மருத்துவராக மட்டும் இல்லாமல், கதையிலும் முக்கியத்துவத்துடன் செயல்படுகிறார்.
முனீஷ்காந்த், ஜெகன், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி போன்ற நடிகர்கள் தங்கள் ஒவ்வொரு காட்சியிலும் கதையின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்கள். ஆனால், படத்தின் உண்மையான “கிளைமாக்ஸ் பலம்” வேதா கதாபாத்திரத்தில் நடித்த சுமேஷ் மூர்தான். “இந்திரா” படத்தில் சைக்கோ கேரக்டராக கவர்ந்தவர் ஒரு மாறுபட்ட வேடத்தில் அதிர்ச்சி அளிக்கிறார்.
இயக்குனர் அபின் ஹரிஹரன் எடுத்துக் கொண்ட தலைப்பு தைரியமானது. மருத்துவ துறையில் நடக்கும் சொல்லப்படாத ஒரு பிரச்சினையை திரைக்கதையாக்குவது எளிதல்ல. ஆனால், அவர் அதைக் கதையின் நாயகனின் விசாரணையுடன் இணைத்து வித்தியாசமான த்ரில்லராக வடிவமைத்திருக்கிறார். சில இடங்களில் “குற்றம் 23” அல்லது “வால்டர்” போன்ற படங்களின் தாக்கம் தோன்றினாலும், “அதர்ஸ்” தனது கதைமாந்திரத்தில் தனித்தன்மையைப் பாதுகாத்திருக்கிறது.
இரண்டாம் பாதி கதையை உண்மையில் புது வேகத்தில் இழுக்கிறது. குறிப்பாக மருத்துவமனையின் காட்சிகள், போலீஸ் விசாரணை இணையும் இடங்கள், சில தருணங்களில் “ஹாலிவுட் மெடிக்கல் த்ரில்லர்” உணர்வைத் தருகின்றன. ஆனால், முதல் பாதியில் அதே ரிதம் இருந்திருந்தால் படம் இன்னும் தாக்கம் ஊட்டியிருக்கும். ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு உயிர் ஊட்டுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் மன அழுத்தத்தையும், மர்மத்தையும் இசையால் உணர்த்தியிருக்கிறார். அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு சிறப்பு. இரவுக் காட்சிகளில் தெரு விளக்குகளின் இயல்பான ஒளியை நுட்பமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில், “அதர்ஸ்” ஒரு மருத்துவ குற்றப்பின்னணியில் உருவான புதிய முயற்சி. மனித நேயம், சமூக சிந்தனை, விசாரணை த்ரில்லர் — மூன்றையும் இணைத்து புதிய கோணத்தில் சொல்லியிருக்கிறது.
