Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

படவா - விமர்சனம்

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கிராமத்தில் விமல், சூரி இருவரும் எந்த வேலைக்கும் செல்லாமல், வெட்டியாக அரட்டையடித்து பொழுதுபோக்குகின்றனர். சிறுபொருட்களை திருடி விற்று குடிப்பது, ஊர் மக்களுக்கு தொல்லை கொடுப்பது அவர்களது அன்றாட வேலை. இதனால் கோபமடைந்த ஊர் மக்கள், விமலை நாடு கடத்த முடிவு செய்கின்றனர். விமல் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் என்ன என்பது மீதி கதை.

குடித்துவிட்டு அலப்பறை செய்வது, ஹீரோயினை பார்த்ததும் காதலுக்காக உருகுவது, வில்லனை பொளப்பது, சூரிக்கு சமமாக காமெடி செய்வது என்று, அக்மார்க் விமல் படம் இது. அவரும் கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். செகண்ட் ஹீரோவாக வரும் சூரி, பன்ச் டயலாக் பேசி காமெடி செய்து கவனிக்க வைத்துள்ளார். கால்நடை மருத்துவராக நடித்துள்ள ஸ்ரீரிட்டா ராவ், விமலை திருத்தி அவருடன் ஆடிப் பாடுவதோடு சரி. மற்றும் விமல் அக்கா தேவதர்ஷினி, மாமா நமோ நாராயணன், வில்லன் ‘கேஜிஎஃப்’ ராமச்சந்திரன், விவசாயி சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர், கேரக்டருக்கு ஏற்ப நன்கு நடித்துள்ளனர்.

கிராமத்தின் குளிர்ச்சியையும், செங்கல் சூளையின் வெப்பத்தையும், சீமை கருவேல மரங்களின் அடர்த்தியையும் ராமலிங்கத்தின் கேமரா யதார்த்தமாக பதிவு செய்துள்ளது. ஜான் பீட்டரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. விவசாயத்தின் அவசியத்தை வலியுறுத்தி, கருவேல மரங்களின் பாதிப்பை சொல்லி எழுதி இயக்கிய கே.வி.நந்தா, பழைய பாணியில் காட்சிகளை நகர்த்தியுள்ளார். படத்தின் நீளத்தை குறைத்திருக்க வேண்டும்.