Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பாம்பாட்டம் விமர்சனம்

மிகப்பெரிய நாட்டை ஆட்சி செய்து வரும் மகாராணி மல்லிகா ஷெராவத்தை, குறிப்பிட்ட நாளில் பாம்பு கடித்து கொன்றுவிடும் என்று சொல்கிறார், அரண்மனை ஜோதிடர். அவர் சொன்னதை நம்பாத மல்லிகா ஷெராவத், உடனே ஜோதிடரை சிறையில் அடைக்கிறார். குறிப்பிட்ட நாளில் மல்லிகா ஷெராவத்தை பாம்பு கடித்து கொன்றுவிடுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த அரண்மனையில் மறைந்திருக்கும் மர்மங்கள் குறித்து விசாரிக்க, போலீஸ் அதிகாரி ஜீவன் நியமிக்கப்படுகிறார். அங்கு அப்படி என்ன ரகசியம் இருக்கிறது என்பதை அவர் கண்டுபிடித்தாரா என்பது மீதி கதை.

சரித்திரக்கதை ஒன்றைச் சொல்லிவிட்டு, பிறகு அதை சமூக கதையுடன் இணைக்கும் பழைய பார்முலாவில் படத்தை வழங்கியுள்ளார், இயக்குனர் வி.சி.வடிவுடையான். கதைக்குள் கதை, பிளாஷ்பேக்கிற்குள் பிளாஷ்பேக் என்று பல கதைகள் இடம்பெற்றாலும், எந்தக்கதையையும் அவர் உருப்படியாகச் சொல்லவில்லை. தரமற்ற கிராபிக்ஸ் காட்சிகள், மங்கலான சிவப்பு நிற ஒளிப்பதிவு என்று பல மைனஸ்கள் இருக்கின்றன. அப்பா, மகன் கேரக்டர்களில் ஜீவன் எந்தவொரு மெனக்கெடலும் இல்லாமல் நடித்துள்ளார். ஒட்டப்பட்ட தாடியின் மூலம் இரு கேரக்டர்களுக்கு வித்தியாசம் காட்டியுள்ளார். பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத், கெஸ்ட் ரோல் போல் வந்து செல்கிறார். நாகமதியாக நடித்த ரித்திகா சென் சற்று கவனிக்க வைக்கிறார். இனியன் ஜே.ஹாரீஸ் ஒளிப்பதிவு படத்தை ஓரளவு காப்பாற்றுகிறது. ‘ரரரரா’ என்ற ஒரே டியூனை படம் முழுக்க பின்னணி இசையாக கொடுத்துள்ளார், அம்ரிஷ். நிறைய செலவு செய்து, நிறைவில்லாத படத்தைக் கொடுத்துள்ளனர்.