கடந்த 2020ல் பாலிவுட் இளம் முன்னணி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீரென்று தற்கொலை செய்துகொண்டது, இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டினர். அவரது திடீர் மரணத்தில் தொடர்பு இருப்பதாக சொல்லி, அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு போதை பொருட்களை வரவழைத்து கொடுத்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு வருட சிறைவாசத்துக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த நான்கு வருடங்களாக அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
அவர் மீது வழக்கு இருந்ததால், அவர் வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்று உத்தரவிட்டு, அவரது பாஸ்போர்ட்டை போதை பொருள் தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தற்போது மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ரியா சக்ரவர்த்தியிடம் அவரது பாஸ்போர்ட் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கணக்கற்ற போராட்டங்கள், முடிவற்ற நம்பிக்கை ஆகியவற்றை தொடர்ந்து எனது பாஸ்போர்ட் மீண்டும் எனது கைக்கு வந்துள்ளது. அடுத்தக்கட்ட வாழ்க்கைக்காக தயாராகிறேன். வாய்மையே வெல்லும்’ என்றார். இதையடுத்து அவர் மீண்டும் பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்குவார் என்று தெரிகிறது.