Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பீனிக்ஸ் விமர் சனம்

எம்எல்ஏ சம்பத் ராஜை கொடூரமாக கொலை செய்த குற்றத்துக்காக, சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் 17 வயது சூர்யா சேதுபதி அடைக்கப்படுகிறார். அவரை அங்கு வைத்து கொல்ல அடியாட்களை அனுப்புகிறார், எம்எல்ஏவின் மனைவி வரலட்சுமி. சூர்யா சேதுபதி உயிர் பிழைத்தாரா என்பது மீதி கதை. ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குனராக அறிமுகமான படம் என்பதால், வழக்கமான பழிவாங்கும் கதையை, ஆக்‌ஷனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ளார். லாஜிக் பற்றி அவர் பெரிதாக கவலைப்படவில்லை.

வன்முறை, ரத்தம், அடிதடி, வெட்டுக்குத்து என்று படம் அல்லோலகல்லோலப்படுகிறது. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி, மாஸ்டர் நடிகராக இருந்து ஹீரோவாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தனது பாடிலாங்குவேஜ், டயலாக் டெலிவரி எதிலும் விஜய் சேதுபதியை ஃபாலோ செய்யவில்லை. சென்டிமெண்ட் காட்சிகளில் பாஸ் மார்க் வாங்குகிறார். மார்ஷல் ஆர்ட்ஸ் கற்று ஆக்‌ஷன் செய்திருப்பது பாராட்டுக்குரியது.

பரிதாபத்துக்குரிய அம்மாவாக வரும் தேவதர்ஷினி கச்சிதம். எம்எல்ஏ வேடத்துக்கு சம்பத் ராஜ் நன்கு பொருந்தியுள்ளார். வில்லியாக வரலட்சுமி மற்றும் அஜய் கோஷ், அபி நட்சத்திரா, ‘வத்திக்குச்சி’ திலீபன், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ஹரீஷ் உத்தமன், ‘ஆடுகளம்’ நரேன், ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ், ஜித் ரவி ஆகியோர், அந்தந்த கேரக்டருக்கு சிறப்பு சேர்த்துள்ளனர். சிறுவர் கூர்நோக்கு இல்லம் மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் ஆர்.வேல்ராஜின் கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது. சாம் சி.எஸ் பின்னணி இசை படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. பிரவீன் கே.எல் எடிட்டிங் குறிப்பிடத்தக்கது. சண்டை காட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவம் திரைக்கதைக்கும் கொடுத்திருக்கலாம்.