கொச்சி: மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், சமீபத்தில் ‘பைசன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அவருடைய பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில் அவரது போட்டோக்களை மார்பிங் செய்து சிலர் பதிவிட்டு வருவதாக புகார் வெளியானது. இந்த விவகாரத்தில் குற்றவாளி, தமிழ்நாட்டை சேர்ந்த 20 வயது பெண் என்று அனுபமா பரமேஸ்வரன் பரபரப்பாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னை பற்றியும், என் குடும்பத்தினரை பற்றியும், எனது நண்பர்கள் மற்றும் சக நடிகர்களை பற்றியும் தவறான பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதாக எனக்கு தெரிய வந்தது. அந்த பதிவு களில் எனது மார்பிங் செய்யப்பட்ட போட்டோக் கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இருந்தன. இதுபோன்ற துன்புறுத்தல்களை ஆன்லைனில் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது. இதுபற்றி விசாரித்தபோது, அதிக வெறுப்பை பரப்பும் நோக்கத்துடன் ஒரே நபர் பல போலியான கணக்குகளை உருவாக்கியது தெரியவந்தது.
இதுபற்றிஅறிந்த நான், உடனே கேரளா சைபர் கிரைமில் புகார் செய்தேன். அவர்கள் உடனடியாகவும், திறமையாகவும் நடவடிக்கை எடுத்தனர். அப்போது இந்த செயலுக்கு பின்னால் இருக்கும் நபரின் அடையாளம் தெரிந்தது. அவர் தமிழ்நாட்டை சேர்ந்த 20 வயது இளம்பெண் என்ற தகவல் ஆச்சரியத்தை அளித்தது. அவருடைய இளம் வயதை கருத்தில் கொண்டு, அவரது எதிர்காலத்துக்கும் மற்றும் மன அமைதிக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், அந்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று நான் முடிவு செய்துள்ளேன். ஆனால், இதுபோன்ற விஷயத்தை தெளிவுபடுத்துவதற்காகவே இப்போது வெளியே பகிர்ந்துள்ளேன்.
