தனது பகுதி மக்களின் எதிர்கால நல்வாழ்க்கைக்காக கடுமையாக போராடும் சமூக போராளி வ.கவுதமனுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் வருகிறது. தனது தந்தையை கொன்ற நபரை பழிதீர்த்து, தாயின் சபதத்தை நிறைவேற்றும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. பிறகு எப்படி மாவீரராக அப்பகுதி மக்களால் அவர் கொண்டாடப்படுகிறார் என்பது மீதி கதை. படம் முழுவதும் காடுவெட்டி குரு கேரக்டராகவே மாறியிருக்கும் வ.கவுதமன், நடிப்பில் விஜயகாந்த் சாயல் தெரிகிறது.
எதிரிகளை அவர் துவம்சம் செய்யும் சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது. இயல்பாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்துள்ளார். அவரது மனைவியாக வரும் பூஜிதா பொன்னாடா பொருத்தமான தேர்வு. சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலிகான், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன ராவ், சாய் தீனா, தமிழ் கவுதமன் உள்பட அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர்.
கோபி ஜெகதீஸ்வரனின் கேமரா, வண்ணமயம். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் வைரமுத்து எழுதிய பாடல்கள் கதைக்கேற்ப இருக்கிறது. சாம் சி.எஸ்சின் பின்னணி இசை ஆர்ப்பாட்டமாக இருக்கிறது. எடிட்டர் ராஜா முகமது நறுக்கென்று கத்தரித்துள்ளார். உண்மை சம்பவத்தை சினிமாவுக்கு ஏற்ப கற்பனை சம்பவங்கள் கலந்து எழுதி இயக்கியுள்ள வ.கவுதமன், மக்களுக்கு கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்.