Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

புகழ்ச்சிக்கு மயங்க விரும்பாத கல்யாணி

பான் இந்தியா படமான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ என்ற படத்தில் சூப்பர் வுமன் கேரக்டரில் நடித்த கல்யாணி பிரயதர்ஷன், தற்போது இந்திய திரையுலகின் முன்னணி ஹீரோயின்களில் பட்டியலில் இணைந்துள்ளார். தமிழில் ரவி மோகனின் ‘ஜீனி’, கார்த்தியின் ‘மார்ஷல்’ ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், ‘ஜீனி’ படத்தில் இருந்து ‘அப்தி அப்தி’ என்ற பாடல் வெளியிடப்பட்டது முதல் இணையதளங்களில் வைரலாகி வருகிறார்.

இதில் அவர் கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். புவனேஷ் அர்ஜூனன் இயக்குகிறார். கிரித்தி ஷெட்டி, வாமிகா கபி, தேவயானி நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் கல்யாணி பிரயதர்ஷன் கூறுகையில், ‘ஒரு நடிகையாக, இதுவரை செய்யாத விஷயங்களை செய்ய, எப்போதுமே எனக்கு நானே சவால் விட்டு முயற்சிப்பேன். அந்தவகையில் இப்பாடலும் ஒன்று.

பாடல் குறித்து இயக்குனர் சொன்னபோது, இவ்வளவு அழகாக ஒரு கமர்ஷியல் இசையை உண்மையாகவும், கதைக்கு முக்கியமானதாகவும் மாற்றியதை பார்த்து வியந்தேன். நீங்கள் அதை படத்தில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கு மிகவும் சக்தி வாய்ந்த காரணங்கள் பின்னணியில் இருக்கிறது. நானும் அதற்காக மிகவும் கடினமாக உழைத்து, புதிதாக ஒன்றை முயற்சித்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் அது பிடிக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

மேலும் அவர் கூறும்போது, ‘துல்கர் சல்மான் தயாரித்த ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் இந்திய அளவில் நான் கவனம் ஈர்த்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். எது எப்படி இருந்தாலும், இந்த திடீர் புகழ்ச்சியை எனது தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். தொடர்ந்து கடினமாக உழைப்பேன். இதுவரை என்னை பாராட்டி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி’ என்றார்.