அமீர் இயக்கத்தில் நடித்த ‘பருத்திவீரன்’ என்ற படத்துக்காக தேசிய விருது பெற்ற பிரியாமணி, தொடர்ந்து தமிழ், ெதலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்கள், வெப் தொடர்கள், விளம்பரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் இணையதளங்களில் வைரலானது. அவர் கூறுகையில், ‘தற்போது ‘பான் இந்தியா’ என்ற சொல்லை அனைவரும் பயன்படுத்தி வருவதை தயவுசெய்து உடனே நிறுத்த வேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள்.
அப்படி இருக்கும்போது, எதற்காக அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்? இந்தி நடிகர் தென்னிந்திய படங்களில் நடித்தால், அவரை ‘தென்னிந்திய நடிகர்’ என்று நாம் சொல்கிறோமா? ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ் போன்றவர்கள் பல்வேறு மொழிகளில் நடித்து வருகின்றனர் என்றாலும், அவர்களை ‘பான் இந்தியா நடிகர்கள்’ என்று யாரும் சொல்லவில்லையே. மொழி முக்கியம் இல்லை. ஏற்று நடிக்கும் கேரக்டர்கள்தான் முக்கியம். இனிமேல், பான் இந்தியா என்ற வார்த்தையை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.
