ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ‘ஆடுகளம்’ நரேனின் மகள் ஜான்விகா கல்லூரியில் படிக்கிறார். துப்பாக்கி சுடுதலில் முதலிடம் பெறுகிறார். தனது மகள் நாட்டுக்கு சேவை செய்யும் ராணுவத்தில் சேர வேண்டும் என்பது தந்தையின் லட்சியம். ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பதை உணர்ந்த ஜான்விகா, அதன்படி தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றினாரா, இல்லையா என்பது மீதி கதை. எல்லா துறையிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேறி வருகிறார்கள். அதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கி தருவதை பயன்படுத்தி பெண்கள் முன்னேறி சாதனை படைக்க வேண்டும் என்பதை இயக்குனர் கலா அல்லூரி படமாக்கியுள்ளார்.
கல்லூரி மாணவி, விவசாயி, ராணுவ வீராங்கனை ஆகிய தோற்றங்களில் ஜான்விகா, தனது கேரக்டருக்கான நியாயத்தை சேர்த்துள்ளார். சண்டைக் காட்சிகளில் துணிச்சலாக அடித்துள்ளார். ஜெய் பாலா, கிரண் பிரதீப், ‘ஆடுகளம்’ நரேன், சென்ராயன், சச்சு, அஞ்சலி தேவி, சின்னப்பொண்ணு, பேய் கிருஷ்ணன், சுதாகர் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். சங்கர் செல்வராஜின் ஒளிப்பதிவும், ராஜீஷ்.கே இசையில் பாடல்களும், ஹமரா.சி.வி பின்னணி இசையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளன. பெண்களை உயர்த்தி பிடிக்கும் இக்கதையை திரைமொழிக்கு ஏற்ப கொடுப்பதில் இயக்குனர் கலா அல்லூரி கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
