Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தயாரிப்பாளர் மீது விக்னேஷ் சிவன் புகார்

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்ஐகே’, ‘டியூட்’ ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. பண்டிகை நாளில் ஒரே ஹீரோவின் 2 படங்கள் ரிலீசானால், அது இரு தயாரிப்பாளர்களுக்கும் பொருளாதார ரீதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள மறுத்து, இரு தயாரிப்பு நிறுவனங்களும் மோதிக்கொண்டன.

இந்நிலையில், ‘எல்ஐகே’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ‘எல்ஐகே’ இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள புகார் அறிக்கையில், ‘இரு ரயில்கள் ஒரே பாதையில், எதிரெதிர் திசையில் வேகமாக பாய்ந்து வந்தால், அது பேராபத்தில்தான் முடியும். அதை தவிர்க்கும் விதமாக எங்கள் படத்துக்கு வழிவிட்டு, வேறொரு தேதியில் ‘டியூட்’ படத்தை ரிலீஸ் செய்யச் சொல்லி, மைத்ரி மூவிசிடம் வேண்டுகோள் வைத்தும் அது பலனளிக்கவில்லை.

எனவே, எங்கள் படத்தை வரும் டிசம்பர் 18ம் தேதி வெளியிடுகிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கிரித்தி ஷெட்டி, யோகி பாபு, கவுரி கிஷன் நடித்துள்ள ‘எல்ஐகே’ என்ற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து வருகிறது. கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள ‘டியூட்’ படத்தில், பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.