சமீபத்தில் பேட்டி அளித்த ஏ.ஆர்.ரஹ்மான், தனது இசைப்பயணம் குறித்து பேசியிருக்கிறார். அவரை ஸ்ருதிஹாசன் பேட்டி எடுத்திருக்கிறார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், ‘எனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாளர்கள் ஜான் வில்லியம்ஸ், இவாஞ்சலிஸ்ட், பாட் மெத்தேனி, சிக் கொரியா, குஷான், அப்பா, ஜான் கார்பெண்டர். இதில் ஜான் கார்பெண்டர் குறித்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி வியப்புடன் பேசியிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு ‘தி பீட்டில்ஸ்’ சகோதரர்களின் இசையை கேட்டேன்.
அவர்களின் இசை மிகவும் பிடித்திருந்தது. இதுபோன்ற சில மேற்கத்திய இசை அமைப்பாளர்களின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். தினமும் நான்கு மணி நேரமாவது முழுமையான கவனத்துடன், எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் பணியாற்ற விரும்புவேன். அப்போது என் அறைக்குள் யாரையும் அனுமதிக்க மாட்டேன். என்னை தேடுவான் என்பதால், என் மகனுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளேன். ஆனால், அவன் எந்த தொந்தரவும் செய்ய மாட்டான். அந்த தனிமையான நேரத்தில் புதிய இசையை அமைத்து பார்ப்பேன்.
புதிய விஷயங்களை முயற்சி செய்வேன். எனக்கு என்ன தெரியும், தெரியாது என்று ஆராய்வேன். நான் என்ன செய்ய நினைக்கிறேனோ, அதை எந்த தடையும் இல்லாமல், அந்த தனிமையான நேரத்தில் செய்வேன். இன்று நிறைய சுயாதீன இசை அமைப்பாளர்கள் இந்தியாவில் அளவற்ற திறமையுடன் வளர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு என்னால் முடிந்த வாய்ப்புகளை அளித்து உதவுகிறேன். நான் நிறைய ரீல்ஸ் பார்ப்பேன். அதில் அதிக திறமை கொண்ட இசை அமைப்பாளர்களையும், பாடகர்களையும் அடையாளம் கண்டு ஆச்சரியப்படுகிறேன்’ என்றார்.