வசந்தபாலன் 2006ல் இயக்கிய ‘வெயில்’ படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர், ஜி.வி.பிரகாஷ் குமார். இவர், ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ஏ.ஆர்.ரெஹானாவின் மகன். பாடகராகவும் இருக்கும் இவர் ’மதயானைக்கூட்டம்’, ‘கிங்ஸ்டன்’ ஆகிய படங்களை தயாரித்தார். 2015ல் ’டார்லிங்’ படத்தில் ஹீரோவானார். பல மொழிப் படங்களுக்கு இசை அமைத்துள்ள இவர், ‘பராசக்தி’ படத்தின் மூலம் இசையில் 100வது படத்தையும், ‘கிங்ஸ்டன்’ படத்தின் மூலம் நடிப்பில் 25வது படத்தையும் முடித்துள்ளார். 2013ல் பாடகி சைந்தவியை காதல் திருமணம் செய்தார். ஒரு மகள் இருக்கும் நிலையில், கடந்த செப்டம்பர் 30ம் தேதி ஜி.வி.பிரகாஷ் குமாரும், சைந்தவியும் சட்டபூர்வமாக விவாகரத்து மூலம் பிரிந்தனர்.
சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ படத்துக்காக முதல் தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ் குமார், தனுஷ் நடித்த ‘வாத்தி’ படத்துக்காக 2வது தேசிய விருது பெற்றார். இரண்டு முறை தேசிய விருது பெற்ற அவருக்கு திடீரென்று ஏ.ஆர்.ரஹ்மான் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவர் பயன்படுத்திய வெள்ளை நிற பியானோவை தனது அக்கா மகனுக்கு பரிசளித்துள்ளார். அந்த போட்டோவை வெளியிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ் குமார், ‘நான் 2வது முறை தேசிய விருது பெற்றதற்காக இந்த பரிசை ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார். என் வாழ்க்கையிலேயே மிகப்பெரிய பரிசான இதைவிட பெரிய பரிசாக நான் என்ன கேட்க முடியும்...’ என்று உணர்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார்.