சென்னை: ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரித்து, ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் ‘தலைவர் 173’ (தற்காலிக தலைப்பு) படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என சில நாட்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சுந்தர்.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘தலைவர் 173’ படத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் சேர்ந்து பணியாற்றுவது எனக்கு கனவு நினைவானது போல. சில நேரங்களில் அந்த கனவுகளை விட நமக்காக வகுக்கப்பட்ட பாதையில் செல்வது முக்கியமானதாக உள்ளது. கடந்த சில நாட்களாக அவர்களுடன் சில மறக்க முடியாத நிகழ்வுகள் எனக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை எனது இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொள்வேன்.
இந்த படத்தில் இருந்து விலகுவதை கனத்த இதயத்துடன் உங்களுக்கு தெரிவிக்கிறேன். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் எனக்கு விலைமதிப்பற்ற பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளனர். இந்த படத்திற்காக என்னை தேர்வு செய்ததற்கு இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த பலருக்கு ஏமாற்றத்தை அளித்ததற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி. இவ்வாறு சுந்தர்.சி கூறியுள்ளார்.
