திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ராம், அப்துல்லா, ஆண்டனி ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். திடீரென்று அவர்கள் தொழிலதிபர் வேல.ராமமூர்த்தியின் பேரனை கடத்தி கொல்கின்றனர். இந்த கொலையை அராஜக போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய் தீனாவும், நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள் சவுந்தரராஜாவும் விசாரிக்கின்றனர். கொலைக்கான பின்னணி என்ன என்பது மீதி கதை.
ராம் ஆக அஜய் அர்னால்ட், அப்துல்லா ஆக அர்ஜூன், ஆண்டனி ஆக பூவையார் ஆகிய மூவரும் கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். மாணவர்களுக்கு ஆதரவாக வரும் சவுந்தரராஜா, கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டுக்கு உதவும் முக்கிய கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார். தந்தை வேடத்தில் தலைவாசல் விஜய், ஜாவா சுந்தரரேசன், கிச்சா ரவி, தாய் வேடத்தில் வினோதினி வைத்தியநாதன், ரமா, ஹரிதா ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர்.
வேல.ராமமூர்த்தி, சாய் தீனா ஆகியோர் வழக்கமான ஸ்டைலில் நடித்துள்ளனர். எல்.கே.விஜய் ஒளிப்பதிவு, டி.ஆர்.கிருஷ்ணசேத்தன் பின்னணி இசை கதையோட்டத்துக்கு வலு சேர்த்துள்ளன. சுரேஷின் ஆக்ஷன் சீன்கள் கவனத்தை ஈர்க்கின்றன. புகையிலை எமன் குறித்த விழிப்புணர்வை வன்முறையுடன் எழுதி இயக்கிய ஜெயவேல், கிளைமாக்சில் பாடம் நடத்தியிருக்கிறார்.
