இந்தியில் ‘போல்நாத் ரிட்டர்ன்ஸ்’, ‘தங்கல்’, ‘சிச்சோர்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் நிதேஷ் திவாரி. இவர் தற்போது ராமாயணக் கதையைத் தழுவி திரைப்படமாக எடுத்துவருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகமான ‘ராமாயணம் பார்ட் 1’ 2026ம் ஆண்டு தீபாவளி அன்றும் இரண்டாம் பாகம் 2027 தீபாவளியன்றும் வெளியாகிறது. இதில் ரன்பீர் கபூர்...
இந்தியில் ‘போல்நாத் ரிட்டர்ன்ஸ்’, ‘தங்கல்’, ‘சிச்சோர்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் நிதேஷ் திவாரி. இவர் தற்போது ராமாயணக் கதையைத் தழுவி திரைப்படமாக எடுத்துவருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகமான ‘ராமாயணம் பார்ட் 1’ 2026ம் ஆண்டு தீபாவளி அன்றும் இரண்டாம் பாகம் 2027 தீபாவளியன்றும் வெளியாகிறது. இதில் ரன்பீர் கபூர் ராமர் வேடத்திலும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். மேலும் சன்னி தியோல் அனுமன் வேடத்திலும் காஜல் அகர்வால் மண்டோதரியாக நடிக்கிறார்கள்.
ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஹாலிவுட் மியூசிக் டைரக்டர் ஹான்ஸ் ஜிம்மர் என இரண்டு ஆஸ்கார் நாயகர்கள் இணைந்து இசையமைக்கிறார்கள். இதன் டைட்டில் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா அளித்த பேட்டியில் படம் பற்றி பேசும்போது, ”எல்லா ஹாலிவுட் படங்களிலும் நம்மை பாதிக்கப்பட்டவர்களாகவும், ஏழைகளாகவும், எப்போதும் அதிர்ஷ்டம் குறைந்தவர்களாகவும், உலகத்தால் மோசமாக நடத்தப்பட்டவர்களாகவும் காட்டினார்கள்.
ஆனால் நாங்கள் அப்படி இல்லை. நான் பிறந்த நாடு இது என்பதை இந்த உலகிற்கு காட்ட வேண்டும் என்று எனக்கு தோன்றியது. உலகிலேயே மிகப் பெரிய காவியத்தை உலகம் பார்க்க வேண்டும் என்பதற்காக இப்படத்தை தயாரிக்கிறோம். சில மிகப் பெரிய ஹாலிவுட் படங்களைத் தயாரிக்க ஆகும் செலவை விட இது சற்று குறைவுதான் என்று நான் நினைக்கிறேன். இரண்டு பாகங்களையும் எடுத்து முடிக்க சுமார் 500 மில்லியன் டாலர்கள் செலவு ஆகும். இது இந்திய மதிப்பில் ரூ.4,000 கோடி” என்று தெரிவித்தார்.