தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக ‘ஏஸ்’, சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மதராஸி’ ஆகிய படங்களில் நடித்திருந்த கன்னட நடிகை ருக்மணி வசந்த், தற்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற படத்துக்கு பிறகு ‘நேஷனல் கிரஷ்’ என்று அவரது ரசிகர்களால் புகழப்படுகிறார். 3 நாட்களில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ள இப்படத்தின் மாபெரும் வெற்றியால், ருக்மணி வசந்தின் பெயர் இந்திய அளவில் பிரபலமாகியுள்ளது. அவரது அழகும், நடிப்பும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. தற்போது அவர் முன்னணி ஹீரோயினாக உயர்ந்துள்ளார்.
‘புஷ்பா: தி ரைஸ்’, ‘புஷ்பா: தி ரூல்’, ‘அனிமல்’ ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு ராஷ்மிகா மந்தனாவுக்கு இந்திய அளவில் ரசிகர்களிடம் இருந்து கிடைத்த அதே அங்கீகாரமும், பாராட்டுகளும், வரவேற்பும் தற்போது ருக்மணி வசந்துக்கு கிடைத்துள்ளது. அவர்கள் இருவருமே கன்னடத்தை சேர்ந்தவர்கள். ‘நேஷனல் கிரஷ்’ என்று அழைக்கப்படுவது குறித்து ருக்மணி வசந்திடம் கேட்டபோது, ‘கடந்த சில நாட்களாக ‘நேஷனல் கிரஷ்’ என்று என்னை புகழ்ந்து வருகின்றனர். அப்படி சொல்வதை கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், இதுபோல் என்னை அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
காரணம், இந்த பாராட்டுகள் குறித்து எப்போதுமே நான் யோசித்து பார்ப்பது இல்லை. அந்த பட்டமும், பாராட்டும், வரவேற்பும் தற்காலிகமானவை. காலப்போக்கில் அதெல்லாம் மாறிவிடும். நன்றாக நடிக்கக்கூடிய நடிகை என்பது மட்டுமே கடைசிவரை நிலைக்கும்’ என்றார்.