தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் ஸ்ரத்தா தாஸ், விமானத்தில் பயணம் செய்தபோது மரணத்துக்கு அருகில் சென்று வந்த பகீர் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு பயணித்த அந்த விமானத்தில் ராஷ்மிகா மந்தனா தன்னுடன் இருந்ததாகவும், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவசர, அவசரமாக தரையிறங்கும் சூழல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து ஸ்ரத்தா தாஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘நானும், ராஷ்மிகாவும் ஒரு திகிலான விமான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறோம். நாங்கள் சென்ற விமானம் கிட்டத்தட்ட விபத்துக்குள்ளானது. அங்கேதான் அவரை பார்த்தேன். உண்மையிலேயே ராஷ்மிகா மந்தனா மிகவும் இனிமையான ஒரு பெண்’ என்றார். அவர் நினைவுகூர்ந்த சம்பவம் கடந்த 2024ல் நடந்தது.
அவர்கள் பயணித்த விமானம், திடீரென்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் தாறுமாறாக ஆடியதால் உடனே தரையிறக்கப்பட்டது. மும்பையில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் மும்பைக்கே திரும்பியது. இதை அப்போதே ஸ்ரத்தா தாஸுடன் செல்ஃபி எடுத்து பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்திய ராஷ்மிகா மந்தனா, அதுகுறித்து வெளியிட்டிருந்த பதிவில், ‘தெரிந்துகொள்ளுங்கள் மக்களே, இன்றைக்கு நாங்கள் இருவரும் இப்படித்தான் சாவின் விளிம்பு வரை சென்று, பிறகு அதிர்ஷ்டவசமாக தப்பித்தோம்’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்த போட்டோவில் ராஷ்மிகா மந்தனாவும், ஸ்ரத்தா தாஸும் தங்கள் கால்களை முன்னால் இருக்கும் சீட்டில் வைத்தபடி மன இறுக்கத்துடன் அமர்ந்திருந்தனர்.
